தமிழ் சினிமாவில் நல்ல படங்களை தந்தவர் இயக்குனர் சற்குணம். விமல் ஓவியா இளவரசு சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்த களவாணி, விமல் இனியா கே பாக்யராஜ் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த வாகை சூடவா போன்ற படங்களை இயக்கியவர். இப்போது வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1990 மற்றும் 2000 ஆண்டுகள் காலக்கட்டத்தில் இளம் நடிகராக பல படங்களில் நடித்தவர் நடிகர் அப்பாஸ். குறிப்பாக காதல் தேசம் ஆனந்தம் பம்மல் கே சம்மந்தம் திருட்டுப்பயலே என பல படங்களில் அப்பாஸ் நடித்திருந்தார். அழகான நடிகரான அவருக்கு பெண் ரசிகைகளும் அதிகமாக இருந்தனர்.
கடந்த 2014ம் ஆண்டில் வெளியான ராமானுஜர் என்ற படத்துக்கு பிறகு நடிகர் அப்பாஸ் கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இதற்கிடையே அவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்பட்டது.
அதே நேரத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லாத நிலையில் குடும்பத்தினர் புறக்கணித்து விட்டதாகவும் அவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் மெக்கானிக் ஒர்க்ஷாப் கன்ஸ்ட்ரக்சன் என சில நிறுவனங்களில் கிடைத்த வேலைகளை செய்து வந்ததாகவும் தகவல் பரவியது. இதை அவரும் சில நேர்காணல்களில் ஒத்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நடிகர் அப்பாஸ் மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்க தயாராகி விட்டார். தயாரிப்பாளர் புஸ்கர் காயத்ரி தயாரிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் புதிய வெப் தொடர் ஒன்று உருவாகி வருகிறது.
இந்த வெப் தொடரில் கதையின் நாயகியாக நடிகை துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரதான கேரக்டரில் நடிகர் அப்பாஸும் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் படப்பிடிப்பு 40 நாட்கள் நடந்து நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு மீதம் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த வெப் தொடர் நடிகர் அப்பாஸூக்கு கம்பேக் தருமா, என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.





