நடிகர் சசிக்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இதில் சிம்ரன் நாயகியாக நடித்திருந்தார். மிதுன் சக்ரவர்த்தி ரமேஷ் திலக் எம்எஸ் பாஸ்கர் குமரவேல் இளங்கோ பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 90 கோடி வரை வசூலித்தது.
இலங்கையில் இருந்து சென்னைக்கு ஓடிவரும் அகதி குடும்பம் ஒன்று, சென்னையில் ஒரு குடியிருப்பில் குடியேறுகிறது. அங்கு அவர்கள் மற்றவர்களின் பழகும் விதம் அவர்கள் கொண்ட நட்பின் காரணமாக கடைசியில் அந்த குடும்பத்தை போலீசாரிடம் இருந்து மற்றவர்கள் எப்படி காப்பாற்றுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நடித்திருந்தார். அவரது நடிப்பும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், அடுத்து அவரது படம் குறித்த ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்தது.
இந்நிலையில் அபிஷன் ஜீவிந்த் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தில் மலையாள நடிகை அனஸ்வர ராஜன் கதாநாயகியாக நடிப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் அந்த படத்துக்கு கரெக்ட் மச்சி என டைட்டில் வைக்கப்பட்டதாகவும் மேலும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணை இயக்குனர்தான் டைரக்ட் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இப்போது இந்த தகவலை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் மறுத்திருக்கிறார். இது ஒரு வதந்தி. இந்த தகவலில் சிறிதும் உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார். அடுத்து நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை அவர் இயக்க உள்ளதாகவும், அதற்கான கதை டிஸ்கஷனில் அவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி படம் 91 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில் படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், நடிகர் சசிக்குமார் போன்றவர்களுக்கு பெரிய லாபம் இல்லை. தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கே கணிசமான லாபம் என்ற நிலையில், இனி அடுத்தடுத்த படங்கள் மூலமே நல்ல வருவாயை அவர்கள் பெற முடியும் என்றும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.





