பீஸ்ட் படத்தில் ரஞ்சிதமே, ஜெயிலர் படத்தில் காவலய்யா உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டவர் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர். கடந்த சில தினங்களுக்கு முன் பெண் நடன கலைஞர் 21 வயதான இளம் பெண் ஒருவர், ஜானி மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.
சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்புகள் நடந்த போது ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினார். ஐதராபாத் அருகில் உள்ள நரசிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில், நடன இயக்குனராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், தனது ஜனசேனா கட்சியில் இருந்தும் ஜானியை நீக்கம் செய்தார். தனக்கு 16 வயதாக இருக்கும் போதே ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளம் பெண் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் அதற்கான 40 பக்க ஆவணங்களை தெலுங்கானா மகளிர் ஆணையத்தில் அந்தப் பெண் சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டது. இது பற்றி மகளிர் ஆணையத்தின் தலைவி நெரல்லி சாரதா கூறுகையில், திரைப்படத்துறையில் இது போன்ற வழக்குகளை விசாரிக்க உயர்மட்ட கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படும். இந்த வழக்கை மிகவும் தீவிரமாக நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து ஜானி மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் நர்சிங்கி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜானியை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கோவாவில் பதுங்கி இருந்த அவரை தெலுங்கானா போலீசார் தற்போது சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ், நித்யாமேனன் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காத பெண்ணே பெண்ணே என்ற பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைத்ததற்காக மத்திய அரசியன் தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டவர் ஞானி மாஸ்டர். அவர் மீது இப்போது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்திருப்பது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





