யூடியூப் சேனல்களில் சில நடிகைகள் மீது தொடர்ந்து அவதூறாக பேசிவரும் இரண்டு பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதில் பெரும்பாலும் பொய்யான தகவல்களை சொல்லி மக்கள் மத்தியில் அந்த நடிகைகள் மீதான இமேஜை டேமேஜ் செய்து வருகின்றனர். அவர்களில் மிக முக்கியமானவர்கள் காந்தாராஜ் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக மாத சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, சமீப காலமாக சமூக வலைதளங்களில் பெண் திரைப்பட கலைஞர்கள் மீது டாக்டர் காந்தராஜ் என்பவரும் நடிகர் பயில்வான் ரங்கநாதனும் தொடர்ச்சியாக யூடியூப் சேனல்களில் நடிகைகள் மீது அருவருக்கத்தக்க ஆபாசமாக பாலியல் ரீதியான அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
பெண் திரைப்பட கலைஞர்கள் வாய்ப்புக்காக பாலியல் சமரசங்களை செய்து கொள்கிறார்கள். பாலியல் சமரசம் செய்தே ஆடம்பரமான வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களை கண்ணியக் குறைவாகவும் மரியாதை குறைவாகவும் திரைப்படத்துறையில் பணியாற்றும் பெண்களுடைய உழைப்பை கொச்சைப்படுத்தியும் அவதூறு பரப்பி வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து முன்னேறி வருகின்றனர். அதுபோல் திரைப்படத் துறையிலும் பணி சூழல் காரணமாக கடும் இன்னல்களை எல்லாம் தாண்டி எந்தவித நேர கட்டுப்பாடும் இல்லாமல் உழைத்து வருகின்றனர்.
திரைப்படத்தில் நடிப்பது என்பது தொழில் என கருதாமல் ஆடம்பரமான வாழ்க்கைக்காக என பெண் கலைஞர்களை மட்டுமே குறிவைத்து ஆணாதிக்க சிந்தனையின் உச்சபட்ச கருத்துக்களை சமூகத்தின் பொது புத்திகள் திணிக்க கூடிய இத்தகைய செயலை அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் இந்த அவதூறு பிரச்சாரங்களை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பெண் திரைப்பட கலைஞர்களின் பாதுகாப்பிற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உறுதுணையாக நிற்கும்.
தென்னிந்திய நடிகர் சங்கம் உள்புகார் கமிட்டி இதுகுறித்து திரைப்பட கலைஞர்களுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்திட வேண்டும். தமிழக மகளிர் ஆணையமும் மேற்கண்ட சம்பவத்தில் தலையீடு செய்து விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கத்தின் சார்பாக இந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





