முன்பெல்லாம் சினிமாவில் கதாநாயகனாக நடித்தால்தான் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த டிரண்ட் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. கதாநாயகனை காட்டிலும் வில்லனை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அதனால் பல ஹீரோக்கள் வில்லன் கேரக்டரில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
புஷ்பா படத்தில் கூட புஷ்பராஜ் என்ற கேரக்டரில் கதாநாயகனாக வரும் அல்லு அர்ஜூன் செம்மர கடத்தல்காரனாக இருந்து சமூக விரோதியாக தான் செயல்படுவார். ஆனால் அவரை சட்டப்படி தண்டிக்க போலீஸ் பிடிக்க முயற்சிக்கிறது. ஆனால் சமூக விரோதி கதாநாயகன் ஜெயிக்க வேண்டும், கடமையை செய்யும் போலீஸ் தோற்க வேண்டும் என்பதுதான் படம் பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதனால் இன்றைய சூழலில் படத்தில் வில்லன் போல செயல்படும் கதாநாயகனை ரசிகர்கள் விரும்புகின்றனர். அதே போல் அடாவடியான வில்லனாக இருந்தாலும் அந்த நடிப்பை கொண்டாட ரசிகர்கள் தவறுவதே இல்லை. அந்த வகையில் பகத் ஃபாசில் விஜய் சேதுபதி எஸ்ஜே சூர்யா போன்றோர் வில்லன் நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இப்போது வா வாத்தியார் சர்தார் 2 ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இந்த படங்கள் ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. அடுத்ததாக நடிகர் கார்த்தி டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிக்க மலையாள நடிகர் நிவின்பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் கால்சீட் பிரச்னையால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதன்பிறகு நடிகர் ஜீவாவிடம் வில்லனாக நடிக்க பேசப்பட்டது. அவரும் வில்லனாக நடிக்க சம்மதிக்கவில்லை. இதையடுத்து நடிகர் கார்த்திக்கு வில்லனாக நடிக்க வேறு ஒரு நடிகரை தேர்வு செய்யும் பணி வேகமாக நடந்து வந்தது. இப்போது நடிகர் ஆதி அந்த கேரக்டரில் நடிப்பது உறுதியாகி உள்ளது.
அறிவழகன் இயக்கத்தில் ஈரம் படத்தில் நடித்த நடிகர் ஆதி, கடைசியாக சப்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் லட்சுமி மேனன் சிம்ரன் லைலா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து தெலுங்கில் அகாண்டா 2 தாண்டவம் ஆகிய படங்களில் நடிகர் ஆதி நடித்து வருகிறார். நடிகர் கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஆதியை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷின் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.





