தமிழ் சினிமாவில் அத்தி பூத்தது போல்தான் மிகச் சிறந்த படங்கள் வருகின்றன. ஏனென்றால் கமர்ஷியல் என்ற பெயரில் கணிசமான லாபத்தை மட்டுமே கவனத்தில் வைத்தே அதிக படங்கள் இயக்கப்படுகின்றன. அதனால், ரசிகர்களுக்கு பொழுதுபோக்கும் படங்கள் வருகிறதே தவிர, அவர்களை பழுதுபார்க்கும் நல்ல படங்கள் வருவதே அரிதாகி விட்டது.
எனினும் அவ்வப்போது சமூக வாழ்க்கையோடு கலந்து யதார்த்த படங்களை சில இயக்குனர்கள் அதிக சிரத்தை எடுத்து ரசிகர்களுக்கு கொண்டு வந்து தருகின்றனர். அப்படித்தான் காக்கா முட்டை, சித்தா, குட்நைட், மகாராஜா போன்ற படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அரிதாக கிடைக்கின்றன. இல்லை எனில் இன்னும் லியோ, வாரிசு, பீஸ்ட், அண்ணாத்த, ஜெயிலர் போன்ற படங்களே திரும்ப திரும்ப ரசிகர்களை சந்திக்க வரும்.
அந்த வகையில் ரசிகர்களை வியக்க வைத்து, அதிர்ச்சியடைய வைத்து, கோபப்பட வைத்த படம்தான் மகாராஜா. ஒரு இளம்பெண்ணின் தகப்பனாக, விஜய் சேதுபதியின் பாசமான நடிப்பும், ஆவேசமான நடிப்பும், அப்பாவித்தனமான நடிப்பும் மகாராஜா படத்தை வேற லெவலில் பேச வைத்தன. படம் முழுக்க டிவிஸ்ட் அடுத்தடுத்து வந்து, ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைத்தது.
ஹீரோயிசம், கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச குலுக்கல் நடனங்கள், சிரிப்பே வராத காமெடி என வழக்கமான மாவையே அரைக்கும் தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவாக உருவான மகாராஜா படத்தை, காட்சிக்கு காட்சி செதுக்கி தந்திருந்தார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். இவர் ஏற்கனவே 7 ஆண்டுகளுக்கு முன் குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றவர்.
இந்நிலையில், மகாராஜா படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் விஜய் சேதுபதிக்கும், இயக்குனர், தயாரிப்பாளர், படத்தில் நடித்தவர்களுக்கு, பணிபுரிந்தவர்களுக்கு இந்த மகாராஜா படம் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இப்போது இந்த படம் இந்திக்கும் போய்விட்டது.
இந்தியில் பல வெற்றிப் படங்களை கொடுத்த மிகச் சிறந்த நடிகராக கவனிக்கப்படும் நடிகர் அமீர்கான், மகாராஜா படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார். அதில் விஜய் சேதுபதி கேரக்டரில் அவரே நடிக்கவும் இருக்கிறார். இதில் இந்தி சினிமாவுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து, இந்தியில் மகாராஜாவை உருவாக்க உள்ளனர். நிச்சயம், இந்தியிலும் மகாராஜா ஒரு கலக்கு கலக்கி விடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.





