தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத்குமார். அவரது நடிப்பில் இந்த ஆண்டில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 படங்கள் வெளியாகின. இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இப்போது நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்தையும் குட்பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்க உள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். வரும் நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.
நடிகர் அஜீத்குமார் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே பைக் ரேஸ்சில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். பலமுறை அவர் மோட்டார் பைக் ரேஸ்களில் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையே பைக் ரேஸில் கலந்துக்கொண்ட போது ஏற்பட்ட ஒரு விபத்தில் அஜீத்குமாருக்கு முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டது. அதனால் 1.5 ஆண்டுகள் அவர் படுக்கையில் இருந்திருக்கிறார்.
எனினும் சினிமாவில் பெரிய நடிகரான பிறகு இப்போதும் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் நடிகர் அஜீத்குமார் அதிக ஈடுபாடும் ஆர்வமும் காட்டி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் நடிகர் அஜீத்குமார் ஆர்வமாக கலந்து கொண்டிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இந்த கார் ரேஸ் வருகிற அக்டோபர் மாதம் வரை 10 மாதங்களுக்கு தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடக்கிறது.
இதில் இதுவரை 7 மாதங்களாக நடந்த சில போட்டிகளில் அஜீத்குமார் கார் ரேஸிங் அணி வெற்றி பெற்றிருக்கிறது. அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராக நடிகர் அஜீத்குமார் இந்த போட்டிகளில் பங்கேற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இதில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்றுள்ளார். இதில் நடிகர் அஜீத்குமார் ஓட்டிச் சென்ற கார் திடீரென விபத்தில் சிக்கியது.
கார் பந்தயத்தில் முன்னால் சென்ற கார் திடீரென டிரெக்கின் குறுக்கே நின்றதால் அதன்மீது அஜீத் குமார் சென்ற கார் பயங்கரமாக மோதியது. இதில் அஜீத் ஓட்டி வந்த காரின் இடதுபுற முன்பகுதி உடைந்து பலத்த சேதமடைந்தது. இதில் காரில் இருந்த அஜீத்குமாருக்கு அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இதுபோல் இதுவரை 4 தடவைக்கு மேல் நடிகர் அஜீத்குமார் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையிலும், அஜீத்குமாருக்கு அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் ஏற்படவில்லை. எனினும் தொடர்ந்து விபத்துகளில் நடிகர் அஜீத்குமார் சிக்குவது அவரது ரசிகர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.





