நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். சீனியர் நடிகர்கள் ரஜினி கமல் ஆகியோரை அடுத்து விஜய் அஜீத்குமார் தான் அடுத்த வரிசையில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இதில் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்துடன் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல்வாதியாக மாறுகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவராக 2026 தேர்தலை நோக்கி வேகமாக பயணித்து வருகிறார்.
அதே நேரத்தில் விஜய் சினிமாவை விட்டு விலகும் நிலையில் அஜீத்குமாரை நோக்கி அதிகளவில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் வருகின்றனர். ஆனால் தேடி வருகிற வாய்ப்புகளை நிராகரித்து விட்டு நடிகர் அஜீத்குமார் கார் ரேஸில் ஆர்வம் காட்டி அதில் ஈடுபட்டு வருகிறார். ஜனவரி மாதம் துவங்கிய கார் ரேஸ் வருகிற அக்டோபர் மாதம் வரை நீடிக்கிறது.
அதன்பிறகுதான் நடிகர் அஜீத்குமார் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். வருகிற நவம்பரில் அந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது. இந்த படத்தையும் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுக்கு அல்லது மே 1ம் தேதி அஜீத் பிறந்த நாளில் வெளியாக வாய்ப்புள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு முதல் கார் ரேஸில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் அஜீத்குமார் ஃபார்முலா மாருதி இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஆசியா சாம்பியன்ஷிப் போன்ற பந்தயங்களின் பங்கேற்றார். கடந்த 2009ம் ஆண்டில் அவர் எம்ஆர்எப் ரேசிங் சீரிஸ்சில் பங்கேற்று தனது முதல் பந்தய அனுபவத்தை பெற்றார். 2010ம் ஆண்டில் அஜீத்குமார் எப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயத்தில் கலந்து கொண்டார்.
சர்வதேச அளவிலான கார் பந்தயத்தை தொடரான இதில் அவர் பல ஐரோப்பிய பந்தயங்களில் போட்டியிட்டார். கடந்தாண்டு முதல் கார் ரேசிங்கில் தீவிர கவனம் காட்டி வரும் அஜீத்குமார் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறார். இதற்கிடையே அஜீத் தனது சொந்த ரேஸ் அணியாக அஜீத் குமார் ரேசிங் என்ற அணியை உருவாக்கினார். இந்த அணி மூலம் அவர் பந்தயங்களில் பங்கேற்று இளம் பந்தய வீரர்களை ஊக்குவித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜீத்குமாரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் அஜீத்குமார் ரேஸிங் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனல் அவரது கார் ரேஸிங் தொடர்பான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது. இதில் அஜீத்குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோக்கள் மற்றும் அது தொடர்புடைய தகவல்கள் பகிரப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சேனல் மூலம் அஜீத்குமார் தனது அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அஜீத்குமார் யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரங்களில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சப் ஸ்கிரைப் செய்திருக்கின்றனர்.





