தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். 47 வயதான நடிகர் விஷாலுக்கு சமீபத்தில் திருமணம் முடிவாகி உள்ளது. வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி, விஷாலின் பிறந்த நாளில் அவரது திருமணம் நடைபெற உள்ளது.
பேராண்மை கபாலி அரவாண் மாஞ்சா வேலு யோகிடா போன்ற படங்களில் நடித்த நடிகை சாய் தன்ஷிகாவை விஷால் திருமணம் செய்ய இருக்கிறார். இருவரும் காதலித்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற உள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழாவுக்கு பிறகு விஷால் சொன்னபடி அவரது திருமணமும் ஆகஸ்ட் 29ம் தேதி நடக்க உள்ளது.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் மூலம் நடிகர் விஷால் பல படங்களை தயாரித்திருக்கிறார். இதற்காக மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச் செழியனிடம் கடன் பெற்றிருந்தார். ஆனால் நீண்ட நாட்களாகியும் வாங்கிய கடனை நடிகர் விஷால் திருப்பிச் செலுத்தவில்லை.
மாறாக பைனான்சியர் அன்புச் செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைக்கா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்டு அன்பு செழியனுக்கு அந்த கடனை திருப்பிச் செலுத்தியது. அதற்கு பதிலாக கடன் தொகை முழுவதையும் லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு விஷால் திருப்பி செலுத்தும் வரை, நடிகர் விஷாலின் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ளாமல் நடிகர் விஷால் அவர் நடித்த வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட்டார். இதனால் விஷாலுக்கு எதிராக லைகா புரொடக்சன் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.
நடிகர் விஷால் மற்றும் லைகா புரடக்சன்ஸ் என இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்ட நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு விஷால் செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் தொகையை 30 சதவீதம் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





