அந்த காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போலவும் அதன்பிறகு ரஜினி கமல் போலவும் இப்போது நடிகர் விஜய் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் கடும் போட்டியாளர்களாக பார்க்கப்படுகின்றனர். ஆனால் இப்போது விஜய் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். அதனால் இனி அஜீத்குமாருக்கு போட்டி யாருமில்லை. விஜய் இடத்தை எந்த நடிகரும் பிடிக்கப் போவதும் இல்லை.
அதே நேரத்தில் வருகிற 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றிப் பெற்றால் மட்டுமே விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த அந்த விஷயம் நிரந்தரமாகும். இல்லை என்றால் அவர் மீண்டும் சினிமாவுக்குள் வந்துவிடவே அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால் தேர்தல் முடிவுதான் விஜயின் சினிமா எதிர்காலத்தை முடிவு செய்யும்.
இதை ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருடன் நடித்த நடிகை மமிதா பைஜூ கேட்ட போதே, தேர்தல் முடிவுக்கு பிறகுதான் இது என் கடைசி படமா என்பதை உறுதியாக சொல்ல முடியும் என்று நடிகர் விஜயே கூறிவிட்டார். அதனால் நடிகர் விஜய் சினிமாவில் மீண்டும் தொடரவும் அதிக வாய்ப்பிருக்கிறது.
நடிகர் அஜீத்குமார் விஜய் இருவரும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் அப்போது இருவருமே வளரும் இளம்நடிகர்களாக இருந்தனர். அதன்பிறகு நேருக்கு நேர் படத்தில் விஜயும் அஜீத்குமாரும் இணைந்து நடித்தனர். சில நாட்கள் கழித்து அந்த படத்தில் இருந்து அஜீத்குமார் விலகி விட்டார். பிறகு அந்த கேரக்டரில் சூர்யா நடித்தார். அதுதான் சூர்யாவுக்கு முதல் படமாக அறிமுகமாக இருந்தது.
நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை இயக்கியவர் பேரரசு. அடுத்து அஜீத்குமார் நடித்த திருப்பதி என்ற படத்தையும் பேரரசு இயக்கி இருந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருமுறை விஜய் குறித்து அஜீத்குமார் பேசியதை வௌிப்படையாக கூறியிருக்கிறார்.
அந்த நேர்காணலில் இயக்குனர் பேரரசு கூறியதாவது, திருப்பதி படத்தில் ஒரு காட்சியில் அஜீத்குமார் முகம் முழுவதும் ரத்தத்தை பூசிவிடும்படியாக காட்சி இருந்தது. அப்போது அஜீத்குமார், என்ன விஜய்க்கு சந்தனத்தை பூசி விட்டீங்க. எனக்கு ரத்தத்தை பூசி விடறீங்களா? என்று கிண்டலாக கேட்டார் என்று இயக்குனர் பேரரசு கூறியிருக்கிறார். திருப்பாச்சி படத்தில் ஒரு சண்டை காட்சியில் முகம் முழுவதும் சந்தனம் பூசிக்கொண்டு விஜய் நடித்திருந்தார். அதையே கிண்டலாக அஜீத்குமார் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.





