உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். கைதி திரைப்படத்தின் சில காட்சிகளை விக்ரமிலும் இணைத்து, எல் சி யு கான்செப்ட்டை இதில் லோகேஷ் கனகராஜ் அறிமுகப்படுத்தினார்.
அதிலும் படத்தின் இறுதிக் காட்சியில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வர, திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டன. அதுமட்டுமில்லாமல் லோகேஷின் எல் சி யூ கான்செப்ட்டையும் ரசிகர்கள் அதிகம் வரவேற்றதால், விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு முழு சுதந்திரம் கொடுத்ததன் காரணமாகவே இந்த திரைப்படம் வெற்றியைப் பெற்றதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்தனர். இதன் வெற்றியால் உற்சாகமடைந்த உலகநாயகன் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் சூர்யாவிற்கும் பரிசுகளை வழங்கினார்.
இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களை அவர் தயாரிக்கிறார். இதில் ஒரு படம் சிவகார்த்திகேயன் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகிறது. காஷ்மீரில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. இன்னொரு படம் சிம்பு தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாகிறது.
இது மட்டுமல்லாமல் நடிப்பிலும் உலகநாயகன் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக அவர் எச் வினோத் மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் இணைய உள்ளார். இதில் வினோத் உடனான படத்திற்கு கமல்ஹாசனே கதை எழுதி இருக்கிறார். அவர் ஏற்கனவே கைவிட்ட தலைவன் இருக்கிறான் திரைப்படத்தின் கதை தான் என்று கூறப்படுகிறது.
இதுபோக மணிரத்னம் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இதற்கான டீசர் அறிவிப்பை முன்கூட்டியே படக்குழு எடுத்திருக்கிறதாம். சமீபத்தில் அதன் சூட்டிங்கிற்கு கமலஹாசனும் சென்று இருக்கிறார். வரும் ஏழாம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாளன்று இந்த வீடியோவை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்த படத்தில் துல்கர் சல்மான் ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்றைய தினம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





