தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத்குமார். நடிப்பில் மட்டும் இன்றி மோட்டார் பைக் மற்றும் கார் ரேஸ் ரைபிள் சுடுதல் போன்ற விளையாட்டுகளிலும் அவர் ஆரம்பத்தில் இருந்தே தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த 9 மாதங்களாக அவர் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் முழு கவனம் செலுத்தி பங்கேற்று வருகிறார்.
நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 9 மாதங்களாக பல்வேறு கார் ரேஸ்களில் அவர் பங்கேற்று வருகிறார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணிக்கு தலைவராகவும் அவர் இருக்கிறார். மேலும் துபாய் இத்தாலி ஸ்பெயின் பிரிட்டன் போன்ற பல நாடுகளில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்று அவரும் அவரது அணியும் பல வெற்றிகளை பெற்றிருக்கின்றன.
நேற்று ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் பங்கேற்ற அஜீத்குமார் அணி 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. முக்கியமான இந்த போட்டியில் 3வது இடத்தைப் பிடித்து வெற்றிப் பெற்ற அஜீத்குமாருக்கு ரசிகர்களை வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் கார் ரேஸ்களில் நடிகர் அஜீத்குமார் ஈடுபட்டு வரும் நிலையில் ஏகே 64 படம் குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
அவர் கடைசியாக நடித்த படம் குட்பேட் அக்லி கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியானது. தற்போது தனது அடுத்த படம் குறித்து அஜீத்குமார் பேசியிருக்கிறார். அதாவது தனது 64வது படத்திற்கான கதை தயாராகி வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும், தனது அடுத்த கார் பந்தயத்தில் இந்திய சினிமாவை பிரமோட் செய்ய உள்ளதாகவும் அதற்காக தனது காரில் இந்திய சினிமாவின் லோகோவை பதிவிட்டுள்ளதாகவும் அஜீத்குமார் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, ஷாலினி கையாளும் விஷயங்கள் ஏராளம். அவருடைய ஆதரவு இல்லை என்றால் என்னால் இதையெல்லாம் செய்ய முடியாது. நான் இல்லாத போது அவர்தான் வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறார். குழந்தைகள் என்னை பார்ப்பது அரிது. அவர்கள் என்னை மிஸ் செய்வது போலவே நானும் அவர்களை மிஸ் செய்கிறேன்.
நீங்கள் நேசிக்கும் ஒன்றை செய்ய நினைத்தால் சில நேரங்களில் தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும். எனது மகனுக்கும் கார் ரேசிங் பிடிக்கும். அவன் கோ – கார்ட்டிங் தொடங்கி இருக்கிறான். ஆனால் அதில் அவன் இன்னும் அதிக கவனம் செலுத்தவில்லை. சினிமாவாக இருந்தாலும் ரேஸிங் ஆக இருந்தாலும் என் கருத்துக்களை குழந்தைகள் மீது திணிக்க நான் விரும்பவில்லை. அவர்கள் எதை செய்ய விரும்புகிறார்களோ அதற்கு நான் ஆதரவு தெரிவிக்க விரும்புகிறேன் என்று நடிகர் அஜீத்குமார் அப்போது கூறியிருக்கிறார்.





