நடிகர் பாண்டியராஜன் இயக்கிய கன்னிராசி படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணியுடன் மளிகைக்கடை பையனாக நடித்திருப்பார் மயில்சாமி. அரும்பு மீசையுடன் 14 அல்லது 15 வயசு பையன் போல அரைடவுசர் பனியன் போட்டுக்கொண்டு தலையில் கூடையில் மளிகை சாமான்களை சுமந்துக்கொண்டு கவுண்டமணி வீட்டுக்கு இறக்கி வைப்பார். அவரிடம் கவுண்டமணி பேசுவது போல அந்த காட்சி இருக்கும்.
அதன்பிறகு பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்து மயில்சாமி ரசிகர்கள் மத்தியில் பெரிய அடையாளத்தை பெற்றார். குறிப்பாக தூள் படத்தில் விருச்சிக ராசியை கேன்சர் என்று சொல்லி விவேக்கை ஏமாற்றும் மயில்சாமி, கடைசியில் சிக்கிக் கொள்வார். ரஜினி விஜயகாந்த் சத்யராஜ் விஜய் அஜீத்குமார் தனுஷ் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் மயில்சாமி நடித்திருக்கிறார்.
மயில்சாமி, சன் டிவியில் காமெடி டைம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அசத்தினார். அதே போல் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரை பின்பற்றியவர் மயில்சாமி. யார் உதவி என கேட்டு வந்தாலும் கையில் இருப்பதை கொடுத்து விடுவார். தன்னிடம் இல்லாத போது மற்ற நடிகர்களிடம் போனில் கேட்டு வாங்கி அவர்களுக்கு உதவும் மிகப்பெரிய பண்பாளராக வாழ்ந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டார்.
இந்நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு ஹீரோவாக நடித்த படம் எமன் கட்டளை. ராஜசேகர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மறைந்த நடிகர் நெல்லை சிவா எமனாக நடித்துள்ளார். 60 நாட்களில் அது நடக்கும் என எமன் சொன்னது என்ன, அதற்குள் தனது காதலிக்கு ஹீரோ திருமணம் செய்து வைத்தாரா என்பது தான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் நடிகர் மயில்சாமி மகன் படத்தின் நாயகன் அன்பு பேசியதாவது, என் அப்பா பலருக்கு உதவி செய்திருக்கிறார். தன்னிடம் வசதி, பணம் இல்லாவிட்டால் கூட கடன் வாங்கி மற்றவர்களுக்கு உதவுவார். அவர் மறைந்த பின் நான் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடிய போது யாருமே எனக்கு உதவவில்லை. பல சினிமா இயக்குனர்கள் நடிகர்களை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எப்பவாவது அவர்களை நேரில் சந்தித்தால் அப்படியா, என்னை பார்க்க முயற்சி செய்தீர்களா? எனக்கு தெரியாதே என்றார்கள்.
அப்பாவின் நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. சினிமாக்காரர்கள், சினிமாவில் இருப்பவர்கள், இருந்தவர்களின் வாரிசுகளுக்கு உதவ வேண்டும். நான் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முயற்சி செய்கிறேன். இந்த படத்தில் என் அப்பா நடிக்கவில்லை. என்னுடன் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவில் அவர் இருந்தார். எமன் கட்டளை படத்தில் நெல்லை சிவா எமனாக நடித்துள்ளார். அவர் சின்ன டயலாக் பேசி தன் ஸ்டைலில் சிரித்தாலே போதும் செட்டே அதிரும். அவர் காலமாகி விட்டது வருத்தம் தரும் விஷயம் என்று நடிகர் அன்பு அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





