நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்பாக வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் நடிகர் ரஜினிகாந்த் என்ன பேசப் போகிறார் என்பதை கேட்க தமிழ் சினிமா ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருக்கின்றனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் காம்போவில் வெளியாகும் முதல் படம் கூலி தமிழ் சினிமாவில் 1000 ரூபாய் வசூலித்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்பும் கோலிவுட் வட்டாரத்தில் இருந்து வருகிறது. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர் சரவணன் சமீபத்தில் சட்டமும் நீதியும் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். அந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் ரஜினி குறித்து வெளிப்படையாக அவர் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சரவணன் கூறியதாவது, நான் சின்ன வயதில் இருந்தே ரஜினிகாந்த் ரசிகன். அவரது ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது கடவுளின் கிருபை நிறைந்த ரொம்பவும் ஆசிர்வதிக்கப்பட்ட ஒருவனாக சந்தோஷமாக உணர்ந்தேன்.
இதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன். நான் யாருக்காக கைதட்டி ரசிச்சேனோ யாருக்காக வாழ்ந்தேனோ யாரை பார்த்து ரசிச்சேனோ அவருடன் நடிக்கிற ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர் மாதிரி எல்லாம் நடிகராக வேண்டும் என்று எப்போதுமே நான் நினைத்தது கூட இல்லை.
அவர் மாதிரி ஹீரோ ஆக நான் நினைத்ததே இல்லை. அவர் மாதிரி எல்லாம் யாராலும் ஆக முடியாது. அதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும். எந்த காலத்திலும் ரஜினி சார் மாதிரி நான் வந்துடுவேன் என்று சொன்னதே கிடையாது. ரஜினி சார் மாதிரி வந்துடுவேன்னு யாராவது சொன்னால் நான்தான் முதலில் உதைப்பேன்.
ஏனென்றால் அவர் மாதிரி யாராலும் வர முடியாது. அவர் ஒரு அபூர்வ ஜென்மம். தனிப்பிறவி அவர். அவர் ரொம்பவும் கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர். நான் அவரை ரசிச்சேன். அவர் கூட நடிக்கிறதை பாக்கியமாக நினைத்தேன். எனக்கு அதுவே போதும். அவ்வளவுதான். திருப்பியும் அவர் கூட நடிக்கணுமா என்றால் போதும். இதுவே திருப்தியா இருக்கிறது. அவர் கூப்பிட்டால் போவேன். ஆனா இதுவே போதும் என்று நடிகர் சரவணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





