தமிழ் சினிமாவில் 1990களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. பல நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பிறமொழி படங்களிலும் நடித்தார். 15 ஆண்டுகளுக்கு மேல் நாயகியாக சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்.
அதன்பிறகு ஒரு காலகட்டத்தில் உள்ளத்தை அள்ளித்தா முறைமாமன் மேட்டுக்குடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சினிமாவில் டிவியில் தயாரிப்பாளராக இருந்து வந்த குஷ்பு பிறகு அரசியலில் ஆர்வம் காட்டினார்.
ஆரம்பத்தில் திமுகவில் இணைந்த குஷ்பு சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். இப்போது பாஜகவில் மாநில துணைத் தலைவராக உள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டியிட்டார். அவருக்காக இயக்குனர் சுந்தர் சி தேர்தல் பிரசாரமும் செய்தார். ஆனால் குஷ்பு வெற்றி பெறவில்லை.
தொடர்ந்து பாஜகவில் குஷ்பு நீடித்து வரும் நிலையில் இப்போது மனைவி குஷ்புவை போலவே இயக்குனர் சுந்தர் சியும் அரசியல் களத்தில் குதித்து விட்டார். இந்த முறை தமிழக சட்டசபை தேர்தலில் அவரே நேரடியாக வேட்பாளராக களத்தில் நிற்கிறார். அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகம் திரைப்பட தயாரிப்பாளர் என்கிற வகையில் சுந்தர் சியின் மிக நெருக்கமான நண்பர். அதனால் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் இயக்குனர் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்.
தன் கணவருக்காக மனைவி குஷ்புவும் தேர்தல் களத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாக அரசியல் களத்தில் காணப்படுபவர் குஷ்பு. அவரைப் போலவே அவரது கணவர் சுந்தர் சியும் இந்த தேர்தலில் வேட்பாளராக நிற்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. சுந்தர் சிக்கு அரசியல் ஆசை எப்போது வந்தது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





