தமிழ் சினிமாவில் 62 வயதிலும் இளமையான தோற்றத்தில் காணப்படுபவர் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன். நடிகராக மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளர் திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர். தனது படங்களில் பெரும்பாலும் டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார்.
நடிகர் அர்ஜூன் தனது 29 வயதிலேயே சொந்தமாக படங்களை இயக்கியவர். சேவகன் மற்றும் பிரதாப் ஆகிய படங்களை அவர் இயக்கிய போது அவருக்கு 29 வயதுதான். அந்த படங்களை அவரே தயாரித்து வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக அர்ஜூன் சில படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார்.
நடிகர் அர்ஜூன் நடிப்பில் பிளாஸ்ட் என்கிற படம் உருவாகியுள்ளது. இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த பிளாஸ்ட் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி சுரேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக அர்ஜூன் மற்றும் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் விவேக் பிரசன்னா ஜான் கொக்கைன் அர்ஜூன் சிதம்பரம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களின் நடித்துள்ளனர். பிளாஸ்ட் படம் இன்று வெளியாகி உள்ளது.
பிளாஸ்ட் படத்தின் பிரமோஷனுக்கான நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் அர்ஜூன் கூறியதாவது, நான் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் ரிதம் தான். அந்த படத்தை எப்போது டிவியில் போட்டாலும் நான் அமர்ந்து ஆர்வமாக பார்ப்பேன். நான் இயக்கிய படங்களை கூட நான் அப்படி பார்த்தது கிடையாது.
ரிதம் கதையில் இருந்த மென்மையே இதற்கு காரணம். படத்தின் நாயகன் கார்த்திகேயனுக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடந்திருக்கலாம் என்று ஒரு காட்சியில் நாகேஷ் சொல்வார். அந்த ஹீரோ கதாபாத்திரம் மிகவும் தன்மையானதாக இருக்கும். இந்த படத்தில் மீனா மற்றும் ஜோதிகாவின் யதார்த்தமான நடிப்பு சிறப்பாக இருக்கும்.
இயக்குனர் வசந்த் ரிதம் படத்தை பிரமாதமாக இயக்கியிருப்பார். இப்படி எல்லா வகையிலும் என் மனதை மனதை தொடும் நல்ல படம் ரிதம். நான் நடித்த படங்களிலேயே என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான படம் என்றால் அது ரிதம் படம் தான் என்று நடிகர் அர்ஜூன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





