கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்குமே சில கடவுள்கள் மீது அதீத பக்தியும் ஈடுபாடும் இருக்கும். அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் பழனி முருகன் கோவில் திருத்தணி முருகன் கோவில் திருச்செந்தூர் முருகன் கோவில் திருப்பதி பெருமாள் கோவில் ஐயப்பன் கோவில் என குறிப்பிட்ட கோவில்களுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா நடிகர்களுக்கும் இஷ்ட தெய்வங்கள் உண்டு. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தீவிர ராகவேந்தர் பக்தர். நடிகர் ராகவா லாரன்ஸ்சுக்கும் ராகவேந்திரர் தான் இஷ்ட தெய்வம். அதே போல் திருப்பதி கோவிலுக்கும் அஜீத்குமார் ரோஜா ரவிமோகன் விக்னேஷ் சிவன் என பல நடிகர் நடிகைககள் அடிக்கடி சென்று வருகின்றனர்.
அந்த வரிசையில் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூனுக்கு மிகவும் பிடித்தமான கடவுள் ஆஞ்சநேயர்தான். அவரது படத்தின் தயாரிப்பு நிறுவனமே ஆஞ்சநேயர் பெயரில்தான் வைத்துள்ளார். படத்திலும் அந்த ஆஞ்சநேயர் சுவாமியை அடிக்கடி காட்டுவார். சென்னையில் சொந்தமாக பிரமாண்டமான ஆஞ்சநேயர் கோவிலை சில ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூன் கட்டியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் கூறியதாவது, சின்ன வயதிலிருந்து என்னுடைய அப்பா எப்போதும் எங்கள் காதுகளில் ராம் ராம் என்று சொல்லுவார். அது சின்ன வயதில் இருந்தே மந்திரம் போல எங்களுக்கு பழகிவிட்டது. இப்போதும் செல்போனில் பேசிவிட்டு வைப்பதற்கு முன்பு ராம் ராம் என்று சொல்வது எங்களுடைய வழக்கமாகி விட்டது.
அனுமார் சுவாமிக்கு கோவில் கட்ட வேண்டும் என்று நான் நினைத்ததும் அது ஏதோ கொஞ்ச வருஷத்துல அழிந்து போகிற மாதிரி இருக்கக்கூடாது. அது தனித்துவமா காலத்துக்கும் இருக்கணும். பல வருஷம் அது அப்படியே நிலைச்சு இருக்கணும்ன்னு நான் யோசித்தேன். அதனாலதான் ஆஞ்சநேயர் சிலையை ஒரே கல்லுல வைக்கணும் என்று ஆசைப்பட்டேன். சிலையை செதுக்க கல்லை தேட கர்நாடகா முழுவதும் சுற்றினேன்.
ஏன்னா சிலையோடு உயரம் 32 அடி. அகலம் 20 அடி. சுற்றளவு 10 அடி. அதை செதுக்கணும்ன்னா 35 அடி உயரம் 25 அடி அகலம் கொண்ட கல்லா இருக்கணும். அவ்வளவு பெரிய கல் ஒன்றரை வருஷமா கிடைக்கலே. கடைசியில் அப்படி ஒரு கல் கிடைத்து அதை தமிழ்நாட்டுக்கு கொண்டுவரவே 3 மாசம் ஆயிடுச்சு. அத இங்கு எடுத்துட்டு வரவே ரொம்பவும் கஷ்டப்பட்டேன் என்று நடிகர் அர்ஜூன் கூறியிருக்கிறார்.





