ஆரம்பத்தில் இயக்குனர் கே பாலசந்தரிடமும் அதன்பிறகு இயக்குனர் அமீரிடமும் உதவி இயக்குனராக பணிசெய்தவர் சமுத்திரக்கனி. நடிகர் சசிக்குமாரும் சமுத்திரக்கனியும் அமீரிடம் பருத்திவீரன் படத்தில் ஒன்றாக பணிசெய்தவர்கள். அதனால்தான் சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக சமுத்திரக்கனி நடித்திருந்தார்.
இதையடுத்து சமுத்திரக்கனி இயக்கிய படம்தான் நாடோடிகள். ஏற்கனவே விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு படத்தை இயக்கிய பிறகுதான் நாடோடிகள் படத்தை சமுத்திரக்கனி இயக்கியிருந்தார். இதில் நாயகனாக சசிக்குமார் நடித்திருந்தார். மேலும் வசந்த் விஜய் ஜெயப்பிரகாஷ் லட்சுமி ராமகிருஷ்ணன் கஞ்சா கருப்பு ராஜா நமோ நாராயணா உள்ளிட்டோர் நடித்திருந்தார். மேலும் கல்லூரி படத்துக்கு பின் இந்த படத்தில் பரணி நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது.
சசிக்குமாரின் நண்பர்களில் ஒருவரான பரணி, நண்பனின் காதலியை கடத்துவதாக செல்லும் போது காதில் பலத்த அடிபடுவார். காரில் தப்பிச் செல்லும் போது பின்னால் ஓடிவரும் அடியாட்களில் ஒருவர் பெரிய கம்பால் பரணியில் காதில் அடித்துவிட அவருக்கு காது கேட்காமல் போவது போன்ற காட்சி படத்தில் இருந்தது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் பரணி, இதுகுறித்து கூறியதாவது, நாடோடிகள் படத்தில் என்னை காதில் அடிக்கிற மாதிரி ஒரு சீன் வரும். முதல்ல அந்த சீனில் டம்மியா ஒரு கம்பை வச்சு அடிச்சாங்க. ஆனால் அது உடையாமல் வளைந்து விட்டது. அதனால் உண்மையான பிவிசி பைப்பில் வச்சுதான் அடிச்சாங்க.
அப்போ அது எனக்கு பெருசா தெரியலே. ஆனா நாள் போக போக எனக்கு பின்மண்டை வலிக்க ஆரம்பித்தது. ஹாஸ்பிடலில் டெஸ்ட் பண்ணி பார்த்தால் அதோட பாதிப்பு இன்னைக்கு வரைக்கும் இருக்கு. என்னதான் இன்னைக்கு வரை எனக்கு வலிச்சாலும் படத்தில் அந்த காட்சியை இன்னைக்கும் பாராட்டுறாங்க. கஷ்டப்படாமல் மெனக்கெடாமல் எதுவும் கிடைக்காது என்று நடிகர் பரணி அதில் கூறியிருக்கிறார்.
நடிகர் பரணி அடுத்து நடித்த சில படங்கள் எதுவும் அவருக்கு பெரிய வாய்ப்பை வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தரவில்லை. நாடோடிகள் 2 படத்திலும் அவர் நடித்திருந்தார். ஆனால் அந்த படமே படுதோல்வியாகி விட்டது. இதற்கிடையே விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரணி பங்கேற்ற போது பரணிக்கும் நடிகர் கஞ்சா கருப்புவுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.





