தமிழ் சினிமாவில் நடிகர் பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவராக தனுஷ் இப்போது இருந்து வருகிறார். அவரது இயக்கத்தில் ப பாண்டி ராயன் ஆகிய படங்களை தொடர்ந்து கடந்த மாதம் 21ம் தேதி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நீக் என்ற படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.
நீக் படத்தில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக நடித்திருந்தார், டீன் ஏஜ் காதலை மையப்படுத்திய இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பிளாப் ஆகி விட்டது. 13 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நீக் படம் ரூ. 8 கோடி மட்டுமே வசூலித்தது. படம் ரசிகர்களிடம் போதிய ஆதரவு பெறவில்லை.
இதற்கிடையே நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதே நாளில் நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படமும் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. நீக் படம் வெளியான அதே நாளில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் வெளியானது. டிராகன் படம் இதுவரை 148 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்த தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்கிய குபேரா படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்போது நடிகர் தனுஷ் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதன்பிறகு அவர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம் இளையராஜா படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சாணிக்காயிதம் கேப்டன் மில்லர் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்கிறார்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பெரிய ஏமாற்றத்தை தந்த போதிலும், தனது அக்கா மகனை தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இடத்துக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் தீவிரமாக இருக்கிறார். தொடர்ந்து அவரை தனது இயக்கத்தில் நடிக்க வைக்காமல் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
நடிகர் சசிக்குமார் நடித்த கிடாரி படம் மற்றும் மத்தகம் என்ற வெப் சீரிஸ் இயக்கிய இயக்குனர் பிரசாத் முருகேசனிடம் நடிகர் தனுஷ் மற்றும் பவிஷ் கதை கேட்டுள்ளனர். அவர் சொன்ன கதை இருவருக்கும் மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதனால் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அடுத்து நடிகர் பவிஷ் நடிப்பது ஏறக்குறைய முடிவாகி விட்டது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





