தமிழ் சினிமாவில், 1980களின் இறுதியில் கதாநாயகியாக அறிமுகமானவர் கௌதமி. குரு சிஷ்யன் படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, தொடர்ந்து ரஜினியுடன் தர்மதுரை, பணக்காரன், கமலுடன் தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கௌதமியின் அசத்தலான அழகும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார், முரளி என முன்னணி நாயகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பிறமொழி படங்களிலும் பிஸியாக நடித்தார்.
ஒரு கட்டத்தில், திருமணம் செய்துவிட்டு சினிமாவை விட்டு விலகி இருந்தவர், பிறகு கணவரை பிரிந்தார். தன் மகளுடன் தனிமையில் வாழ்ந்த அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அந்த நோயில் இருந்து போராடி மீண்டு வந்த கௌதமி, சரிகாவை பிரிந்திருந்த கமலுடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் சேர்ந்து வாழ துவங்கினார்.
தாலி கட்டிக்கொள்ளாமல், கணவன் மனைவியாக இருவரும் குடும்பம் நடத்திய நிலையில், 13 ஆண்டுகளுக்கு மேல் அவர்களது உறவு நீடித்தது. பிறகு திடீரென கமலை விட்டு கௌதமி விலகினார். பாஜக ஆதரவாளராகி மாறி, கட்சி பொறுப்பில் இருந்த கெளதமி, சமீபத்தில் பாஜகவை விட்டும் விலகினார். அவரது கட்சி சார்ந்தவர்களே நில மோசடி செய்து அவரை ஏமாற்றிய நிலையில், கட்சி தலைமை கௌதமிக்கு ஆதரவாக செயல்படாததே இதற்கு முக்கிய காரணம்.
இந்நிலையில், கமலுடன் வாழ்ந்த வாழ்க்கையில், அவரது உறவை பிரிந்தது ஏன் என்பது குறித்து நடிகை கௌதமி, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஒரு ரிலேசன்ஷிப்பில் நீங்கள் இருக்கும் போது, அந்த உறவு ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், அதற்கான எல்லா பொறுப்பையும் நீங்கள் ஏற்க தேவையில்லை,
அந்த உறவில் இருவருக்கும் இடையிலான அன்பு, அர்ப்பணிப்பு இரண்டும் சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உறவு நீண்டகாலம் நீடிக்கும். எந்தவிதமான உறவாக இருந்தாலும், அதற்கு நடுவில் ஒரு மையப்புள்ளி கண்டிப்பாக இருக்கும். இரண்டு பேர் உறவில், அந்த 50 சதவீதத்தை தாண்டக் கூடாது. இதை நான் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக கற்று இருக்கிறேன், என்று கமலுடன் வாழ்ந்த வாழ்க்கையை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார் நடிகை கௌதமி.





