தென்னிந்திய சினிமாவில் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் தான் ஏவிஎம் ப்ரொடக்சன்ஸ். இந்த நிறுவனத்தின் முதுகெலும்பாக விளங்கியவர்களில் ஏவிஎம் சரவணன் மிக முக்கியமானவர். சமீபத்தில் தான் அவர் மறைந்தார். தமிழ் சினிமாவின் காலத்தை பிரதிபலிக்கும் வகையில் இப்போது முன்னணி நட்சத்திர நடிகர்களாக இருக்கும் சில முக்கிய நடிகர்களின் பிரமாண்ட வெற்றி படங்களுக்கு ஏவிஎம் புரொடக்சன்ஸ் தான் வித்திட்டது என்றால் அது மிகையல்ல.
அந்த வெற்றிப் படங்களின் பட்டியலை பார்க்கும்போது இது ஏவிஎம் புரோடக்சன் தயாரிப்பில் உருவானது என்பதே கோலிவுட்டின் பெருமைதான். குறிப்பாக இயக்குனர் ஷங்கர் – நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான படம் சிவாஜி தி பாஸ். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக ரஜினிக்கு அமைந்தது. அதேபோல் ஏவிஎம் தயாரித்த முரட்டுக்காளை படமும் ரஜினிக்கு மிக முக்கியமான படமாக அவரது சினிமா பயணத்தில் இருந்தது.
அதேபோல் கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் அயன். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று நடிகர் சூர்யாவுக்கு இன்றுவரை பெயர் சொல்லும் ஒரு முக்கிய படமாக இருக்கிறது. அயன் படத்தை தயாரித்ததும் ஏவிஎம் தான். நடிகர் பிரபுதேவா அரவிந்த்சாமி கஜோல் நடிப்பில் வெளியான படம் மின்சார கனவு. ஏஆர் ரகுமான் இசையில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படமும் ஏவிஎம் தயாரிப்புதான்.
அதேபோல் இயக்குனர் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீனா நடித்த எஜமான் படமும் ஏவிஎம் தயாரிப்புதான். அன்று முதல் இன்று வரை குடும்பங்களால் கொண்டாடப்படும் மாபெரும் குடும்ப காவியம் சம்சாரம் அது மின்சாரம் பெரிய வெற்றிப் படமாகும். இது தேசிய விருது பெற்றதுடன் ஒரு குடும்ப திரைப்படத்திற்கான இலக்கணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நடிகர் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது சகலகலா வல்லவன். எஸ்பி முத்துராமன் இயக்கிய இந்த படமும் கமல்ஹாசனின் திரைபயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் கே பாக்யராஜூக்கு மிகப்பெரிய வரவேற்பை பாராட்டைப் பெற்றுத் தந்த படம் முந்தானை முடிச்சு. ஏவிஎம் தயாரித்த இந்த படத்தில் தான் நடிகை ஊர்வசி அறிமுகமாகி இருந்தார்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சரோஜா தேவி இணைந்து நடித்த அன்பே வா படத்தை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம் தான். அன்று முதல் இன்று வரை அன்பே வா படத்துக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு பெரிய புகழை தேடித் தந்த பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.





