தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவான படம் குபேரா. கடந்த 20ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் நாயகனாக நடிகர் தனுஷூம்நாயகியாக ரஸ்மிகா மந்தனாகவும் நடித்திருந்தனர்.
குபேரா படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் தீபக் என்ற முக்கிய கேரக்டரில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா நடித்திருக்கிறார். குபேரா படம் வெளியான 3 நாட்களில் 85 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களில் கூறப்படுகிறது. ஆனால் தமிழில் குபேராவுக்கு பெரிய வரவேற்பு இல்லை.
இந்நிலையில் குபேரா படத்தின் சக்சஸ் மீட் நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா இயக்குனர் சேகர் கம்முலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் நடிகர் சிரஞ்சீவி பேசியதாவது, குபேரா படத்தில் தனுஷை தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவரால் மட்டுமே இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க முடியும், அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்க முடியும். அந்த கேரக்டரில் அந்த அளவுக்கு தனுஷ் நடித்திருந்தார். படத்தில் திருப்பதி காட்சியில் பார்த்தபோது, எனக்கு அவரை அடையாளமே தெரியவில்லை.
அந்த அளவுக்கு அவ்வளவு இயல்பாக தனுஷ் நடித்திருந்தார். தேசிய விருது பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் அவரது நடிப்பில் உள்ளது. அப்படி இல்லை என்றால் அந்த விருதுகள் அதன் அர்த்தத்தையே இழந்து விடும். நீங்கள் ரொம்பவே ஈடுபாட்டுடன் நடிக்கிறீர்கள் தனுஷ். உங்கள் அர்ப்பணிப்பு தெரிகிறது என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷை பாராட்டி சிரஞ்சீவி பேசினார்.
நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. அவர் நடிகர் தனுஷை பாராட்டி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் நடிகர் ரஜினியின் முன்னாள் மருமகன் நடிகர் தனுஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் விவகாரத்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





