கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தவெக மொத்தம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. பிறகு காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விசிக உள்ளிட்ட கட்சிகளில் ஆதரவால் தவெக ஆட்சி அமைத்து முதல்வராக விஜய் பதவியேற்றார். ஆனால் இந்த ஆதரவு எம்எல்ஏக்கள் எல்லாருமே திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 2 எம்எல்ஏக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 2 எம்எல்ஏக்கள் என 4 பேர் ஆதரவு தந்துள்ளனர். ஆனால் அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு தந்தார்களே தவிர அமைச்சரவையில் பங்கு பெறவில்லை. ஆனால் விசிக காங்கிரஸ் முஸ்லீம் கட்சிகள் அமைச்சரவையில் உள்ளன.
தற்போது இடைத்தேர்தல் மதுராந்தரம் தாராபுரம் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிகள் சார்பில் 2 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு களத்தில் உள்ளனர். அதே நேரத்தில் தவெக ஆட்சி நிர்வாகம் மற்றும் முதல்வர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது இடதுசாரி கட்சிகள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றன. எனவே மிக விரைவில் அவர்கள் தவெகவுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெறும் முடிவில் உள்ளனர். இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு அவர்கள் முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது, சட்டசபையிலும் சரி சட்டசபைக்கு வெளியிலும் சரி முதலமைச்சர் அமைச்சர்கள் பிரச்னைகளை திசை திருப்புகின்றனர். இப்படி பிரச்னைகளை திசை திருப்புவதால் பிரச்னைகள் தீராது. ஒரு பிரச்னையை சட்டசபையில் முன் வைத்தால் அதை தீர்க்க வேண்டியவர்கள் முதலமைச்சர் அல்லது மற்ற அமைச்சர்கள் தான்.
அதற்குரிய பதில்களை அவர்கள் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு பிரச்னைகளை திசை திருப்பி விட்டால் பிரச்னைகள் தீராது. ஆதவ் அர்ஜூனாவுக்கு எங்கள் மீது திடீர் ஏன் இவ்வளவு கோபம் என்று எங்களுக்கு தெரியவில்லை. அவர் சொல்கிற இந்த இடதுசாரிகள் கட்சி ஆதரவில்தான் தவெக ஆட்சி நடந்துக்கொண்டு இருக்கிறது.
சிபிஎம் சிபிஐ கட்சிகள் தவெக ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்று விட்டால் சட்டசபையே இருக்காது. அப்புறம் மந்திரி சபையும் இருக்காது. எப்போது அது நடக்கும் என்று கவர்னர் காத்துக்கொண்டு இருக்கிறார். இது எல்லாம் தெரிந்து தான் ஆதவ் அர்ஜூனா பேசுகிறாரா, தெரியாமல் பேசுகிறாரா என்று தெரியவில்லை என்று முன்னாள் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





