தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் கூல் சுரேஷ். இவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முறை போட்டியாளராக பங்கேற்றவர். திரைப்பட விழாக்கள் இசைவெளியீட்டு விழாக்கள் சினிமா பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துக்கொள்கிறார்.
இதுபோன்ற சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வரும்போது நடிகர் கூல் சுரேஷ் வித்யாசமான உடைகளை அணிந்து வருவார். பரபரப்பாக ஏதேனும் ஒரு விஷயத்தைப் பேசி இணையத்தில் வைரல் ஆகி விடுவார். அந்த வகையில் இப்போது ஆட்டி என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கூல் சுரேஷ் அணிந்து வந்த ஆடை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் தமிழக அரசால் சிங்கப்பெண் அதிரடிப்படை என்ற சிறப்பு பிரிவு தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்புதான் அந்த திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் துவங்கி வைத்தார். அதற்காக சிறப்பு சீருடை உருவாக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு படைக்கான அதிகாரபூர்வமான காவல் சீருடையை ஆட்டி பட விழாவுக்கு நடிகர் கூல் சுரேஷ் அணிந்து வந்திருக்கிறார். பெண்கள் பாதுகாப்புக்கான தமிழக அரசின் போலீஸ் சீருடையை சினிமா விளம்பர நிகழ்ச்சிக்காக காமெடி நடிகர் கூல் சுரேஷ் அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த செய்தியாளர்கள் தங்களது கண்டனத்தை அவரிடம் நேரடியாக தெரிவித்தனர்.
இதனால் கடுப்பான நடிகர் கூல் சுரேஷ், இது எப்படி இழிவுபடுத்துவது ஆகும்? நானும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தான் இந்த உடையை அணிந்து வந்துள்ளேன். உங்களைப் போன்ற ஆட்கள் தான் ஒரு நல்ல விஷயம் செய்தாலும் அதை மாற்றி மாற்றி பேசி நாட்டை குட்டி சுவராக்கி வைத்திருக்கிறீர்கள். நான் கத்தி எடுக்கிறேன் என்றால் அது ஆப்பிள் ஆரஞ்சு பழத்தை வெட்டுவதற்காக தான் இருக்கும். ஆனால் நீங்கள் நான் கழுத்தை வெட்டுவதற்காகதான் கத்தி எடுத்தேன் என்று எப்படி சொல்ல முடியும்? என்று பதில் பேசியிருக்கிறார்.
நடிகர் கூல் சுரேஷ் தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பேசியிருந்தாலும், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கண்டனம் வலுத்து வருகிறது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பது மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சிங்கப்பெண் அதிரடி படையின் சீருடையை கூல் சுரேஷ் போன்றவர்கள் தங்கள் சுய விளம்பரத்திற்காக பயன்படுத்துவதும் கேலி பொருளாக்குவதும் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் இணையத்தில் கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.





