இன்று 2025ம் ஆண்டு புதிய ஆண்டாக மலர்ந்துள்ளது. உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை வரவேற்று மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டில் சகல செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வளமாக வாழ, வெற்றிக்கரமான ஆண்டாக அமைய மக்கள் தங்களது வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டு ஆங்கில புத்தாண்டு தீபாவளி பொங்கல் விநாயகர் சதுர்த்தி ஆயுத பூஜை போன்ற நாட்களில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டு நிற்பது வழக்கம். பிறகு திடீரென வீட்டுக்குள் இருந்து வெளியே வரும் ரஜினி, அங்குள்ள ரசிகர்களை பார்த்து கையசைத்து கும்பிட்டு மகிழ்ச்சியை தெரிவிப்பார். அது இன்றும் நடந்தது.
இன்று காலை தன் வீட்டுக்கு முன் நின்றிருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்த ரஜினிகாந்த் கருப்பு நிறத்தில் குர்தா போன்ற ஒரு பேண்டும், வெள்ளை நிற டீ சர்ட்டும் அணிந்திருந்தார். சில விநாடிகளே வீட்டுக்கு முன் நின்றிருந்த ரசிகர்ளை பார்த்த ரஜினி, எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டார். எனினும் ரஜினியை பார்த்து ரசிகர்கள் ஆவேசமாக கோஷமிட்டு வாழ்த்துகளை கூறினர்.
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட பதிவில் நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறி பதிவிட்டுள்ளார். இது ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் அவர் பேசிய பிரபலமான வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி நெகட்டிவ் ஆன ஒரு வசனத்தை சொல்லி ரஜினி புத்தாண்டு வாழ்த்துகளை கூறியிருப்பது புது பஞ்சாயத்தை கிளப்பி இருக்கிறது. புத்தாண்டு அன்றே உங்களை கடவுள் சோதிப்பான் என்றும், கெட்டவங்களை கைவிடுவான் என்றும் ரஜினி வாழ்த்தில் கூறியிருப்பது இது ரசிகர்களுக்கு சொன்ன வாழ்த்துகள்தானா என்ற சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
லைகா புரடக்சன்ஸ் தயாரித்த தர்பார் லால் சலாம் வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரஜினி. ஆனால் பொங்கலுக்கு விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்வதை லைகா புரடக்சன்ஸ் தள்ளி வைத்துள்ளது. அதனால் அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆறுதலாக இந்த வசனத்தை சொல்லி இருக்கிறாரா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





