- Advertisement -
Homeபொழுதுபோக்குபோயஸ் கார்டனில் தனுஷ் வீடு கட்ட இதுதான் காரணமா? - ராயன் பட விழாவில் நடந்த...

போயஸ் கார்டனில் தனுஷ் வீடு கட்ட இதுதான் காரணமா? – ராயன் பட விழாவில் நடந்த உண்மைகளை வெளிப்படையாக சொன்ன நடிகர் தனுஷ்

- Advertisement -

நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். மற்ற நடிகர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என்பதுதான். ஆனால் அதுவும் இன்னும் சில மாதங்களில் மாறிவிடும். ஏனென்றால் அவரது மனைவி ஐஸ்வர்யாவும், தனுஷூம் விவாகரத்து கேட்டு, குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் இருந்தாலும் நடிப்புத் துறையில் தொடர்ந்து நடிகர் தனுஷ் பிஸியாக இருந்து வருகிறார். இப்போது தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவும் இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம், 2 பாகங்களாக உருவாகிறது. அந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கிறார். அத்துடன் வடசென்னை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களிலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்கிடையே நேற்று, சென்னையில் தனுஷ் நடித்து இயக்கியுள்ள ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் தனுஷ் பல விஷயங்களை ரசிகர்கள் மத்தியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். குறிப்பாக கடந்த பல மாதங்களாக, நடிகர் தனுஷ், ரஜினிகாந்துக்கு போட்டியாக தான் போயஸ் கார்டனில் மிகப்பெரிய அரண்மனை போன்ற மிக பிரமாண்டமான வீட்டை கட்டி இருக்கிறார் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. அதற்கு இந்த விழாவில் தனுஷ் பகிரங்கமாக பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -

விழாவில் அதுகுறித்து நடிகர் தனுஷ் பேசியதாவது, சின்னப் பையனாக இருந்த போது தலைவர் ரஜினிகாந்த் வீட்டை பார்க்க, போயஸ்கார்டன் பக்கமாக சென்றேன். அங்கிருந்த போலீஸ் அண்ணன்களிடம் கேட்ட போது, அங்க தான் இருக்கு, பார்த்துவிட்டு சத்தமில்லாமல் போய்விடு என்றனர். நான் தலைவர் வீட்டைப் பார்த்துவிட்டு சந்தோஷமாக திரும்பி வந்தால், பக்கத்தில் மற்றொரு வீட்டின் முன்னால் ஜே ஜே என மக்கள் கூட்டமாக இருந்தது.

அது யாருடைய வீடு என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது, ஜெயலலிதாம்மா வீடு என்றார்கள். நான் அப்படியே வியந்து போய்விட்டேன். அந்த பக்கம் ரஜினி வீடு, இந்த பக்கம் ஜெயலலிதா வீடு. நடுவில் நம்ம வீடு கட்டினால் எப்படி இருக்கும்? என்று பேசியிருக்கிறார். ஆக, சிறுவயதில் இருந்தே போயஸ் கார்டனில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை தனக்கு இருந்ததை, இந்த விழாவில் வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகர் தனுஷ்.

- Advertisement -

சற்று முன்