நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் சீனியர் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். கிழக்கு போகும் ரயில் படத்தில் தனது சினிமா பயணத்தை துவங்கிய ராதிகா, இப்போதும் சினிமாவில், டிவி சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில், தனது கணவர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் வரலட்சுமியின் திருமண நிச்சயதார்த்த விழாவில் மகிழ்ச்சியாக பங்கேற்றார். அந்த புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
நடிகை ராதிகா, எம்ஆர் ராதா மகள். நடிகர் ராதாரவியின் சகோதரி. நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மனைவி என்ற அடையாளங்களை கொண்டவர். அதுமட்டுமின்றி ராடன் கம்பெனி மூலம் டிவி சீரியல்களின் தயாரிப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர்.
ராதிகாவின் முதல் கணவர் மறைந்த டைரக்டர் பிரதாப் போத்தன். 2வது கணவர் ரிச்சர்ட். அவரது மகள்தான் ரேயன். சரத்குமார் 3வது கணவர். இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி. இவருக்கும், சரத்குமாருக்கும் பிறந்தவர்கள் 2 மகள்கள். அதில் ஒருவர்தான் வரலட்சுமி சரத்குமார். அவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நடிகை ராதிகா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அப்போது நடிகர் தனுஷ் என்னை போனில் அழைத்து திட்டினார் என்ற தகவலை அவர் கூறியிருக்கிறார். அதுபற்றி ராதிகா கூறுகையில், நான், நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி, நாயகியாக நயன்தாரா நடித்திருந்தனர். படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.
அப்போது போனீல் அழைத்த நடிகர் தனுஷ். என்னிடம் சில விஷயங்களை பேசினார். அப்போது, நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவன் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார்கள். அந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா, என்று கேட்டார். நான் ஷாக் ஆகி, என்னடா சொல்றே? எனக்கு எதுவுமே தெரியாதே, இப்போ தானே அவங்களோட ஷூட்டிங் முடிச்சிட்டு வர்றேன், அப்படீன்னு சொன்னேன்.
இதனால் கோபமான தனுஷ், உங்களுக்கு வெட்கமா இல்லையா, பெரிய நடிகைன்னு சொல்லிக்கறீங்க? இதைக்கூட உங்களால கண்டுபிடிக்க முடியலை அப்படீன்னு திட்டினான். எனக்கே அந்த தகவல் ஆச்சரியமாக இருந்தது. அவங்க ரெண்டு பேருமே சரியான உண்மையான நடிகர்கள்தான். எந்த இடத்திலும் அவர்கள் தங்களை காட்டிக்கொள்ளாமல் அவர்களது வேலையில் ஈடுபட்டனர். அதனால்தான் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, என்று கூறியிருக்கிறார்.





