கடந்த சில தினங்களாக நடிகர் தனுஷ், தன்னுடைய படத்துக்காக போடப்பட்ட பிரமாண்டமான ஒரு ஷெட்டை நடிகர் விஜய் நடித்துவரும் ஜனநாயகன் படத்துக்காக விட்டுக்கொடுத்தார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் உண்மை நிலவரம் குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நடிகர் தனுஷ் நடித்த ஒரு படத்தின் ஷெட் ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் மிக பிரமாண்டமாக போடப்பட்டு அங்கு தனுஷ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அந்த ஷெட்டை பிரித்து, குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் சிக்கல்களும் செலவும் அதிகம் என்பதால் அந்த ஷெட்டை அப்படியே தயாரிப்பு நிறுவனம் விட்டு விட்டது.
படப்பிடிப்பு முடிந்த பிறகு இப்படி விடப்படும் பிரமாண்ட ஷெட்டுகளை வேறு படங்களில் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்வது வழக்கம்தான். இது பல ஆண்டுகளாக இப்படி நடந்து வருகிறது. இந்நிலையில் தனுஷ் படத்துக்கு போட்ட ஷெட்டை விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு பயன்படுத்தியதாக தவறான தகவல் பரவியுள்ளது.
ஏனெனில் நடிகர் விஜய் நடித்தது பையனூரில். ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் ஜனநாயகன் படப்பிடிப்பை நடத்தவில்லை. யாரோ சிலர் தவறான தகவலை பரப்பி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் மற்றொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் தனுஷ் நடித்த படத்தின் ஷெட், நடிகர் ரஜினிகாந்த் நடித்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது நடிகர் தனுஷ் இயக்கி நடித்த படம் ராயன். இது தனுஷ் நடித்த 50வது படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் கடந்தாண்டில் வெளியான ராயன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் ஷெட் ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டு படத்தின் பெரும்பாலான காட்சிகள், அங்குதான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படப்பிடிப்பு, ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடந்துள்ளது. அப்போது அங்கு இருந்த ராயன் படத்துக்காக போடப்பட்ட ஷெட்டில்தான் நடந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ராயன் மற்றும் கூலி ஆகிய 2 படங்களுக்குமே தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான். அதனால் மாஜி மாமனார் ரஜினிக்கு மாஜி மருமகன் தனுஷ் விட்டுக்கொடுத்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம். நடிகர் விஜய்க்கு தனுஷ் ஷெட் கொடுத்து உதவியதாக யாரும் சொல்லக் கூடாது என தளபதி ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.





