தமிழ் சினிமாவில் வெற்றிப் பட இயக்குனர் என்றால் இயக்குனர் சுந்தர் சியை தைரியமாக சொல்ல முடிகிறது. காமெடி காதல் கமர்ஷியல் ஜானரில் தொடர்ந்து பயணிக்கும் அவரது படங்கள் பெரிய அளவில் வரவேற்பையும், வெற்றியையும் பெற்று விடுகின்றன. இரண்டரை மணி நேரம் ஜாலியாக சிரித்து நேரத்தை கழிக்க சுந்தர் சி இயக்கிய படங்கள் 100 சதவீதம் உத்தரவாதம் தருகின்றன.
அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு முன் 2012ம் ஆண்டில் உருவாகி, 12 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியான மதகஜ ராஜா படம் மாபெரும் வரவேற்பை, வெற்றியை பெற்றது. இந்த படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. சந்தானம் ஹீரோவாக நடிப்பதற்கு முன் காமெடி ரோலில் நடித்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிய பக்கபலமாக இருந்தார்.
நடிகர் விஷாலுக்கும் மதகஜ ராஜா படம் பெரிய கம்பேக் கொடுத்தது. அதே நேரத்தில் தொடர்ந்து சுந்தர் சி விஷால் கூட்டணியில் புதிய படம் உருவாக இருந்த நிலையில், விஷால் கேட்ட சம்பளத்தால் இயக்குனர் சுந்தர் சி அந்த படத்தை கை கழுவி விட்டார். இப்போது சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா அபிநயா இனியா யோகிபாபு கன்னட நடிகர் துனியா விஜய் கருடன் ராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஆனால் இயக்குனர் சுந்தர் சி கலகலப்பு கலகலப்பு 2 படங்களுக்கு பிறகு கலகலப்பு 3 படத்தை இயக்குவதாக பல மாதங்களாக தகவல் வெளியானது. கடந்த 2012ம் ஆண்டில் நடிகர்கள் விமல் மிர்ஷி சிவா நடிகைககள் அஞ்சலி ஓவியா மற்றும் சந்தானம் விஎஸ் ராகவன் இளவரசு சுப்பு பஞ்சு கருணாகரன் ஜார்ஜ் மரியன் நடித்த கலகலப்பு படம் பெரிய வெற்றியை பெற்றது.
அதன்பிறகு சுந்தர் சி இயக்கத்தில் 2018ம் ஆண்டில் கலகலப்பு 2 படம் வெளியானது. இந்த படத்தில் ஜீவா ஜெய் மிர்ஷி சிவா சதீஷ் கேத்தரின் தெரசா நிக்கி கல்யாணி ரோபோ சங்கர் விடிவி கணேஷ் சந்தானபாரதி முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்த இந்த படமும் காதல் காமெடி என பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக தான் ஜீவா ஜெய் நடிக்க கலகலப்பு 3 படம் எடுக்க சுந்தர் சி திட்டமிட்டு, இப்போது அதை கைவிட்டு விட்டார்.
இதுகுறித்து நடிகர் ஜீவா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, மதகஜ ராஜா படத்தில் ஒரு சின்ன போர்ஷன் இருக்கு ஜீவா. அந்த படம் இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போல இருக்குது. அந்த போர்ஷனை டெவலப் பணணி கலகலப்பு 3ம் பாகமாக எடுத்துடலாம் என்றுதான் சுந்தர் சி என்னிடம் கூறியிருந்தார். அப்புறம் மதகஜ ராஜா படம் ரிலீஸ் ஆனதால், கலகலப்பு 3ம் பாகம் குறித்த ஐடியா மாறிவிட்டது, என்று நடிகர் ஜீவா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





