இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை வெற்றியை பெற்ற படம் கும்கி. இந்த படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நாயகியாக லட்சுமி மேனன் நடித்திருந்தனர். கடந்த 2012ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் மாதையன் என்ற கேரக்டரில் ஊர்த் தலைவராக ஜோ மல்லூரி நடித்திருந்தார்.
இவர் ஒரு எழுத்தாளர். விலைமகளின் நாட்குறிப்பு தமிழாரம் போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். பாடல்களும் எழுதியிருக்கிறார். சினிமா நடிகராகவும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். கும்கி படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஜில்லா அஞ்சான் தெனாலிராமன் என பல படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக காக்கா முட்டை படத்தில் இவரது நடிப்பு தனி கவனம் பெற்றது. ரயில் தண்டவாளப் பகுதியில் கரி சேகரிக்கும் சிறுவர்களிடம் நண்பராக பழகும் ஒரு ரயில்வே துறை ஊழியராக ஜோ மல்லூரி நடித்திருப்பார். எந்த கேரக்டர் என்றாலும் அதில் நல்ல அழுத்தமான நடிப்பை தருபவர். கல்லூரி பள்ளி இலக்கிய விழாக்களில் தொடர்ந்த பேசி வருகிறார்.
ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் ஜோ மல்லூரி பேசியதாவது, நான் நிறைய மேடைகளில் சொல்லி இருக்கிறேன். இளைஞர்களே இளம்பெண்களே உங்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் எந்த நடிகரின் பின்னாலும் சென்று விடாதீர்கள் என்றுதான் நான் மேடைதோறும் முழங்கி இருக்கிறேன். இவ்வளவுக்கும் நான் விஜயுடன் நெருக்கமானவன். சூர்யாவுக்கும் நெருக்கமானவன்.
ஆனாலும் உங்களுக்கு நான் இதை சொல்கிறேன். இந்த சமுதாயத்தில் புதிய தலைவன் ஒருவன் உருவாகிறான் என்றால் அது சினிமா நடிகனாக இருக்கக் கூடாது. இந்த தலைமுறை அறிவாளிகளின் பின்னால் போக வேண்டும். அதற்காக நடிகர்கள் அறிவாளி இல்லை என்று சொல்லவில்லை.
ஒரு நடிகன் திரைத்துறை சார்ந்தவனாக இருக்கட்டும். அல்லது எந்த துறை சார்ந்தவனாகவும் இருக்கட்டும். அவன் தலைவனாக வருகிற போது முதிய தலைமுறையிடம் முத்தம் பெற்று புதிய தலைமுறைக்கு ரத்தம் கொடுக்கிற ஆற்றல் பெற்றவனாக இருந்தால் மட்டும்தான் அவன் உண்மையான தலைவனாக இருக்க முடியும் என்று நடிகர் ஜோ மல்லூரி பேசியிருக்கிறார்.





