தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும் போது, தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என்று கூறினார். இது பெரிய அளவில் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கன்னட அமைப்புகள் பல கமலுக்கு எதிரான கண்டனத்தை தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. இந்த விவகாரத்தில் கமல் நடித்த தக்லைஃப் படமும் அங்கு ரிலீஸ் ஆகவில்லை.
தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி பிறந்தது என கமல்ஹாசன் சொல்லியதில் எந்த தவறும் இல்லை. அவர் சரியாக தான் கூறியிருக்கிறார் என்று தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் திருமாவளவன் சீமான் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கமலுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். அதே நேரத்தில் மன்னிப்பு கேட்டால் தக்லைஃப் படத்தை வெளியிட அனுமதிப்போம் என்றும் கன்னட அமைப்புகளும் கர்நாடக அரசும் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையும் கமல் மன்னிப்பு கேட்டாக வேண்டும். இல்லை எனில் தக்லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிப்போம் என்று கூறிய நிலையில் நடிகர் கமல்ஹாசன், அவர்களுக்கு விளக்க கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். மன்னிப்பு கேட்காமல் அவர், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு வருத்தம் மட்டுமே அதில் கூறியிருந்தார்.
அதே நேரத்தில், தக்லைஃப் படத்தின் தயாரிப்பாளராகவும் உள்ள கமல், கர்நாடகாவில் தனது படத்தை வெளியிட அனுமதி வழங்கவும், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தரவும் கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, கமலுக்கு மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ, அவர் என்ன மொழியியல் வல்லுனரா எதற்காக கன்னட மொழி குறித்து பேச வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன் பிறகுதான், மன்னிப்பு கேட்காத கமல்ஹாசனை கண்டிக்கும் விதமாக தக்லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் இல்லை என்பதும் உறுதியானது. எனினும் அந்த படம் ரிலீஸ் ஆகியிருந்தாலும் கர்நாடகாவில் வசூலை ஒன்றும் வாரி குவித்து விடப் போவதில்லை. தமிழ்நாட்டிலேயே தக்லைஃப் திரையிடப்பட்ட தியேட்டர்கள் காற்று வாங்குகிறது. இதற்கிடையே கமல் மன்னிப்பு குறித்த ஒரு விளக்கம் தந்து கர்நாடகா மக்களை, கன்னட அமைப்புகளை கதற விட்டிருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் கமல் அவரது பாணியில் கூறியிருப்பதாவது, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இந்த மன்னிப்பு நீங்கள் கேட்ட மன்னிப்பு அல்ல; இது அதற்கான அல்ல, அந்த மன்னிப்பை கேட்க மாட்டேன் என்றதால் உங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டு இருந்தால் அதற்கான மன்னிப்பாக இதைக் கொள்க. ஆனால் இந்த மன்னிப்பை அந்த மன்னிப்பாக ஏற்காதீர்கள் என்றுதான் சொல்ல விழைகிறேன். நீங்கள் இந்த மன்னிப்பை அந்த மன்னிப்போடு முடிச்சு போடுவது மன்னிக்க முடியாதது என்றும் கூறுகிறேன். ஆகவே நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறவில்லை என்று கமல்ஹாசன் பயங்கரமாக குழப்பி விட்டிருக்கிறார்.





