தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். கடைசியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் என்ற படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார். சிம்பு திரிஷா அசோக் செல்வன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதைத்தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 3 படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது. என்றாலும் இன்னும் ஒரு மாத கால படப்பிடிப்பு பாக்கி இருப்பதால் அந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் தனது 237வது படத்தில் நடிக்க இருக்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருப்பதாகவும் தெரிகிறது. இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்து வரும் நடிகர் கமலஹாசன் சமீபத்தில் தான் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றார்.
மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தும் கீழடி உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதியாக இருப்பதால் தொடர்ந்து அவர் மீதான விமர்சனங்களும் சர்ச்சைகளும் இருந்து வருகின்றன.
இந்நிலையில் மக்கள் நீதி மையம் தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவர் ஓய்வு பெற்ற ஐஜி மவுரியா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த புகார் மனுவில் சனாதனத்திற்கு எதிராக பேசிய மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு டிவி சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் சார்பில் சமீபத்தில் நடந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சனாதானத்திற்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் கமல்ஹாசனின் கழுத்தை அறுப்போம் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்ந்த நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





