தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமா ரசிகர்களையும் தனது இசையால் கட்டிப் போட்டவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்தில் தொடங்கி இறுதியாக வெளியான விடுதலை திரைப்படம் வரை இளையராஜாவின் இசையால் சொக்கி போனவர்கள் இங்கு நிறைய பேர் உண்டு.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இசை என்றாலே இளையராஜா தான் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஏராளமான பாடல்களை நமக்கு ஊட்டி அவர் வளர்த்திருக்கிறார். இளையராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று ரசிகர்கள் எப்போதும் இணையத்தில் பேசி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இப்படி கோடான கோடி ரசிகர்களை சம்பாதித்து இருக்கும் இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று இங்கு பலரும் கூறி வந்தனர். பயோபிக் திரைப்படத்தில் எப்போதுமே ஒரு எமோஷன் கனெக்ட் இருக்கும் என்பதால், அதற்கான வரவேற்பும் இங்கு இருந்து வருகிறது.
இப்படியான சூழலில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக ஆரம்பம் முதலில் பேசப்பட்டு வந்தது. இருப்பினும் அதற்கான எந்த பணிகளும் தொடங்கப்படாமல் இருந்தன. இப்படியான சூழலில் அதன் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் இளையராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில், இளையராஜாவின் பயோபிக் திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜாவாக தனுஷ் நடிப்பதற்கு எவரும் ஆட்சேபனம் தெரிவிக்காத சூழலில், அருண் மாதேஸ்வரன் இயக்கப் போவதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ராக்கி, சாணி காகிதம், கேப்டன் மில்லர் என மூன்று திரைப்படங்களை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். டெக்னிக்கலாக அவரது படம் பலமாக இருந்தாலும், ரத்தம் தெறிக்க தெறிக்க ஒவ்வொரு காட்சியையும் அவர் அமைத்திருப்பது இங்கு பலருக்கும் முக சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் ரத்த களரியுடன் தனது படத்தை எடுக்கும் இவரால், எப்படி ஒரு பயோபிக் திரைப்படத்தை அதன் எமோஷன் குறையாமல் எடுக்க முடியும் என்று பலரும் இங்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு ஏற்றது போலவே அவரது திரைப்படங்களில் உணர்வைத் தூண்டும் காட்சிகள் குறைவாகவே இருந்திருக்கின்றன. தற்போது அருண் மாதேஸ்வரன் குறித்த இந்தப் பேச்சு வைரலாகி வரும் சூழலில், அதற்கெல்லாம் இயக்குனர் தனது இயக்கத்தின் மூலம் பதிலடி கொடுப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.





