தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் எந்த அளவுக்கு கொண்டாடப்படுகிறார்களோ அதே அளவுக்கு வில்லன் நடிகர்களும் கொண்டாடப்படுகின்றனர். ஏனெனில் இங்கு நல்லவராக நடிப்பதை காட்டிலும் கெட்டவராக நடிப்பதற்குதான் அதிக பாராட்டு கிடைக்கிறது. ஏனெனில் அந்த கேரக்டரில் நடிக்க அதிக ஆளுமை தேவைப்படுகிறது.
ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற ஹீரோவை போலவே, வில்லனும் அதிகம் ரசிகர்களால் கவனிக்கப்பட வேண்டும். அதனால்தான் பாட்ஷா படத்தில் ரஜினியை எதிர்த்த வில்லன் ரகுவரன் பேசப்பட்டார். ரகுவரன் அந்த வில்லன் கேரக்டரில் நடித்திருக்காவிட்டால், பாட்ஷா படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்காது என ரஜினியே பலமுறை சொல்லி இருக்கிறார்.
அதே போல் வில்லன் நடிகர்களாக நாசர், ரகுவரன், பிரகாஷ் ராஜ், சத்யராஜ், ஆனந்தராஜ், கிஷோர், டேனியல் பாலாஜி போன்றவர்கள் பல படங்களில் வில்லன் நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கின்றனர். அந்த காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி படங்களில் கூட எம்என் நம்பியார், அசோகன், ஆர்எஸ் மனோகரன் போன்றவர்களின் வில்லத்தனமாக நடிப்பு படத்தை வேற லெவலில் விறுவிறுப்பாக்கும்.
அந்த வகையில் இப்போது வில்லன் நடிப்பில் அசத்திக்கொண்டு இருப்பவர்கள் எஸ்ஜே சூர்யா, மலையாள பஹத் பாசில் இருவரும்தான். பல படங்களில் வில்லன் கேரக்டர் என்றாலே இவர்கள் இருவரில் ஒருவரை தான் இயக்குனர்கள் கமிட் செய்கின்றனர். அந்தளவுக்கு வில்லன் நடிப்பில் இருவரும் அசத்தி வருகின்றனர்.
குறிப்பாக வேலைக்காரன், புஷ்பா, மாமன்னன் போன்ற படங்களில் பஹத் பாசில் வில்லன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. குறிப்பாக மாமன்னன் படத்தில் ரத்னவேலு கேரக்டரில் நடித்த பஹத் பாசிலுக்கு தான் இணையத்தில் ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக அவர் வடிவேலுவை பார்த்து பேசிய என்ன பழக்கம்ணே இது டயலாக் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது.
புஷ்பா, புஷ்பா 2 படங்களில் பிரதான வில்லனாக பஹத் பாசில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் புஷ்பா 2 படத்தின் பிரமோ நிகழ்ச்சி, கேரளம் கொச்சியில் நடந்தது. இந்த விழாவில் பேசிய படத்தில் நாயகன் அல்லு அர்ஜூன், இதுவரை என்னுடன் நடித்த பல நடிகர்களில் மிக சிறந்த மலையாள நடிகர் பஹத் பாசில்தான். அவரை நான் இங்கு மிஸ் செய்கிறேன். அவருடன் இங்கு ஒன்றாக நிற்க ஆசைப்பட்டேன், என்று வருத்தமாக பேசியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





