தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு நேரம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் படத்தில் நடிக்கும் ஹீரோ, படப்பிடிப்பை தாமதப்படுத்தினால் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவர். குறிப்பாக, அந்த யூனிட்டில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர் தினசரி வருவாயை இழக்கும் அபாயமும் உள்ளது.
சமீபத்தில், நடிகர் அஜீத்குமார் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு தினமும் இரண்டு மணி நேரம் தாமதமாக வருவதாக தகவல் பரவியது. இதனால், இரண்டு மாதம் அஜர்பைஜானில் திட்டமிட்ட படப்பிடிப்பு, மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண், மாதத்தில் சில தினங்கள் மட்டுமே ஹூட்டிங் வருவது வழக்கம் என்கின்றனர்.
இப்படி முக்கிய முன்னணி நடிகர்கள் நடிக்க வருவதில் தாமதம் செய்வதால், அவர்களை படங்களை இயக்கும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் குறிப்பாக அந்த யூனிட்டில் பணிசெய்பவர்களும் விரைவில் மனச்சோர்வு அடைவர். நல்ல கதை இருந்தும், அந்த படத்தில் அந்த ஹீரோ நடித்தால் சிறப்பாக இருக்கும் என இயக்குநர் திட்டமிட்டாலும், நடிகரின் இந்த அலட்சியம் அந்த படங்களில் நடிக்கிற வாய்ப்பை இழக்க வைக்கும்.
கேம் சேஞ்சர் என்ற படத்தை, பல மாதங்களாக இயக்குநர் ஷங்கர் எடுத்து வருகிறார். இன்னும் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இழுத்துக்கொண்டே போகிறது. காரணம் படத்தின் ஹீரோ ராம்சரண்தான் என்கின்றனர். மாதத்தில் சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வரும் அவர், மற்ற நாட்களில் காணாமல் போய் விடுகிறார். இவரது தாமதத்தால், உடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் கால்ஷீட் சொதப்பி படப்பிடிப்பையே சில தினங்கள் ரத்து செய்யும் நிலை ஏற்படுகிறது.
ஆனால் இந்த விஷயத்தில், கமல் போன்ற பெரிய நடிகர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதுவும், சொந்த தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் கமலுக்கு இந்த விஷயம் எல்லாம் தெள்ளத் தெளிவாக தெரியும். அதனால் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள், படம் இயக்குநர்களுக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் கவனித்துக்கொள்வார்.
இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு எச் வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இப்போது, எச். வினோத் இயக்கும் படத்துக்கு 40 நாட்கள் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்துள்ள கமல், அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்துக்கு 10 நாள், எச் வினோத் இயக்கும் படத்துக்கு 10 நாள் என மாறி மாறி, கால்ஷீட் தந்துள்ளார். இது, பிஸியாக பல படங்களில் நடிக்கும் சில நடிகர்களுக்கு நல்ல ஐடியா என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.





