தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தரும் முக்கிய படைப்பாளியாக இயக்குனர் பாலா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அவரது இயக்கத்தில் வெளியான சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், பரதேசி, நாச்சியார், தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
வரும் பொங்கல் பண்டிகைக்கு இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் வாய் பேசாத கேரக்டரில் நடித்த வணங்கான் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆன நடிகர் சூர்யா, ஒரு மாதத்துக்கு பின் நடிக்க விருப்பமின்றி வெளியேறியதால், சூர்யா நடித்த கேரக்டரில் பிறகு அருண் விஜய் நடித்துள்ளார்.
இயக்குனர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சாகுடுக்கி என்ற கேரக்டரில் நடித்தவர் கஞ்சா கருப்பு. அவர் இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக இருந்தவர். பாலா இயக்கிய படங்களின் தயாரிப்பு பணிகளிலும் அவருக்கு கீழ் பணியாற்றியவர். பிதாமகன் படத்தில் நடித்த பிறகு பல படங்களில் நடித்த கஞ்சா கருப்பு, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் கஞ்சா கருப்பு கூறியதாவது, பிதாமகன் படத்துக்கு முன்பே நந்தா படத்தில் ஒரு கேரக்டர் இருக்கு வாடா என்று இயக்குனர் பாலா என்னை அழைத்தார். நான்தான் பயந்துக்கொண்டு போகவில்லை. போனா அடிப்பார், எதுக்கு ரிஸ்க் என்றுதான் நான் மறுத்து விட்டேன்.
அவரது தயாரிப்பு பணியில் இருந்திருக்கிறேன். அவரது படத்தில் நடித்தும் இருக்கிறேன். ஆனால் அவரிடம் நான் அதிகமாக திட்டு வாங்கியது. அவருக்கு உணவு பரிமாறும் போதுதான். திட்டும் வாங்குவேன். அடியும் வாங்கியிருக்கிறேன். அவரது திருமணத்துக்கு முன்பு வரை பாலாவுக்கு நான்தான் அலுவலகத்தில் உணவு பரிமாறுவேன். அவர் மிகவும் கொஞ்சமாக தான் சாப்பிடுவார்.
ஆனால் நான் சில நேரங்களில் அவர் போதும் என்று சொன்ன பின்னாலும் நிறைய உணவை தட்டில் போட்டுவிடுவேன். குனிஞ்சு சாப்பிடுபவர், என்னை பார்த்து முறைப்பார். நான் போதுமுன்னு சொல்லிட்டு இருக்கேன், நீ வெச்சுக்கிட்டே இருக்கே, எதுக்கு மாடு மாதிரி இப்படி பண்றே என்று என்னை திட்டுவார். சில நேரங்களில் கோபம் அதிகமாகி என்னை அடித்தும் இருக்கிறார் என்று காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





