தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்துக்கு அடுத்தபடியாக மதிக்கப்படும் பெரிய கலை குடும்பம் என்றால், அது நடிகர் சிவக்குமார் வீடுதான். எம்ஜிஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்த சீனியர் நடிகராக மதிக்கப்படுபவர் சிவக்குமார்.
அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். சிவக்குமாரின் மூத்த மருமகள் சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் பிரபல நடிகையாக இருக்கிறார். ஒரே குடும்பத்தில் 4 பேருமே பிரபல நடிகர்கள் என்பது குடும்பத்துக்கே பெருமைதான்.
இந்நிலையில், பருத்திவீரன் தயாரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையில், அதில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரான கார்த்தி, அமீர் குறித்து அவருக்கு ஆதரவாக ஒருவார்த்தை கூட பேசவில்லை. ஞானவேல்ராஜா பேசிய போதும் அதை கண்டிக்கவில்லை.
அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவில் கூட அமீரை நேரில் பார்த்த சூர்யா, அண்ணா எப்படி இருக்கறீங்க என நலம் விசாரித்து, கட்டியணைத்தார். ஆனால் அதே நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கார்த்தி, ஒருமுறை கூட அமீர் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், தன்னை ஹீரோவாக்கிய இயக்குநர் என்ற உணர்வே இல்லாமல் நடந்துக்கொண்டதும் வைரலானது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி நடத்திவரும் உழவன் பவுண்டேசன் அமைப்பு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறந்த விவசாயிகளுக்கு விருது, உதவித்தொகைகள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் சிவக்குமார் மற்றும் நடிகைகள் ரோகிணி, கீர்த்தி பாண்டியன், நடிகர்கள் தம்பி ராமையா, பசுபதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ஆண்டுதோறும் பொங்கல் வைத்து விவசாயிகள் கால்நடைகளுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்கின்றனர். அதை பொங்கல் திருநாளாக கொண்டாடுகின்றனர். ஆனால் தினமும் நாம் மூன்று வேளையும் சாப்பிடுகிற உணவை தரும் விவசாயிகளுக்கு நன்றி சொல்ல மறந்து விடுகிறோம். அவர்களுக்கு எப்போதும் நாம் நன்றி கூற வேண்டும். பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்க கூடாது என்று பேசியிருக்கிறார்.





