தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக கவின் இருக்கிறார். துவக்கத்தில் விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து அறிமுகமான நடிகர் கவின், பிறகு விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியாவை அவர் காதலித்து, அந்த சீசனை வைரலாக்கினார்.
பிக்பாஸ் போட்டியில் கலந்துக்கொண்ட பிறகு கவினுக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தன. இதற்கிடையே அவர் நடித்த டாடா படம் மிகப்பெரிய வெற்றியை, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அடுத்து லிப்ட் படமும் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. கொரோனா காலகட்டத்தில் இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
டாடா, லிப்ட் படங்கள் தந்த வெற்றியை தொடர்ந்த ஸ்டார் படத்தில் கவின் நடித்தார். இந்த படத்தின் டிரெய்லர் படம் குறித்த பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் வெளியான பிறகு, ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையே தந்தது. எனினும் ஒருமுறை பார்க்கலாம் என்ற அளவில் ஸ்டார் படத்துக்கு ரசிகர்கள் விமர்சனம் இருந்தது.
இந்நிலையில் நடிகர் கவின் நடிப்பில் பிளடி பெக்கர் படம் தீபாவளியன்று வெளியானது. ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் தயாரிப்பில், அவரது நண்பர் சிவபாலன் இயக்கிய பிளடி பெக்கர் படத்தில் கவின் நாயகனாக நடித்திருந்தார். இதில் அவர் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், பலத்த அதிருப்தியடைந்தனர்.
பிளடி பெக்கர் படத்தின் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை பைவ் ஸ்டார் செந்தில் என்ற வினியோகஸ்தர், ரூ. 11.5 கோடிக்கு எடுத்திருந்தார். தீபாவளிக்கு வெளியாகும் கவினின் இந்த படம் பெரிய லாபத்தை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில், அவர் பிளடி பெக்கர் படத்தை தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் வெளியிடும் உரிமத்தை பெற்றார். ஆனால், இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால் வினியோகஸ்தர் பைவ் ஸ்டார் செந்திலுக்கு ரூ. 3 கோடி மட்டுமே கிடைக்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ. 8 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
வினியோகஸ்தர் பைவ் ஸ்டார் செந்தில் ஏற்கனவே மாஸ் ஹிட் படங்களான பார்க்கிங், கருடன், மகாராஜா ஆகிய 3 படங்களின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு உரிமம் பெற்று கணிசமான லாபம் அடைந்தவர். மொத்த லாபத்தையும் பிளடி பெக்கர் படத்தில் போட்டுவிட்டு இப்போது நஷ்டத்தில் தவிக்கிறார். அதே நேரத்தில் பிளடி பெக்கர் படத்தின் தயாரிப்பாளர் நெல்சன், இதுபோன்ற நஷ்டம் எதுவும் தன்னை பாதிக்காத வகையில் ஏற்கனவே அவர் ஒப்பந்தம் போட்டிருப்பதால், மொத்த நிதி இழப்பையும் பைவ் ஸ்டார் செந்தில் ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





