மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகரில் ஒருவர் மோகன்லால். பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தமிழிலும் விஜயுடன் ஜில்லா, கமலுடன் உன்னைப்போல் ஒருவன், ரஜினியுடன் ஜெயிலர், கார்த்திக்குடன் கோபுர வாசலிலே உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு வேற லெவலில் இருக்கும்.
நடிகர் மோகன்லால் இப்போது பரோஸ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தற்போது வரை மலையாளத்தில் பிஸியான நடிகராக பல படங்களில் அவர் நடித்து வந்தாலும், அவருக்குள் ஒரு இயக்குனர் ஆசை இருந்த நிலையில் இப்போது பரோஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகை தினமான நாளை (25ம் தேதி) இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்து சென்ற வரலாற்று பின்னணியில் இந்த படத்தை 3டி தொழில்நுட்பத்தில் மோகன்லால் உருவாக்கியுள்ளார். மேலும் பரோஸ் படம்தான் நான் இயக்குகிற முதலும் கடைசியுமான திரைப்படம், இனிமேல் அடுத்த படம் இயக்கப் போவதில்லை என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதியாக கூறியிருக்கிறார் மோகன்லால்.
மேலும் இப்படி முதல் படத்தையே 3டி தொழில்நுட்பத்தில் இயக்க வேண்டும் என தோன்றியது ஏன் என்கிற ஆச்சரியமான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். பொதுவாக படங்கள் 3டியில் வெளியாகும் போது பார்வையாளர்களுக்கு என அதற்கேற்ற 3டி கண்ணாடி வழங்கப்படும்.
ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இப்படி கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்கும்போது கூட காட்சிகள் தெளிவில்லாமல் தெரிவதும், பலருக்கு தலைவலி ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்துதான் வருகிறது. இப்படி கண்ணாடி அணியாமலேயே பார்க்கும் விதமாக ஒரு 3டி படத்தை ஏன் உருவாக்க முடியாது என்கிற எண்ணம் எனக்குள் தோன்றியது.
இது போன்ற சவாலான முயற்சிகளை மேற்கொள்வது என்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனைத் தொடர்ந்து நான் எடுத்த முயற்சிகளின் பலன் தான் இந்த பரோஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை 3டி கண்ணாடி அணியாமலேயே பார்க்க முடியும். அதே சமயம் 3டி படம் பார்த்த அந்த முழுமையான அனுபவமும் கிடைக்கும். அதற்கான தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மோகன்லால் கூறியிருக்கிறார்.





