கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்கும் ஒரு படம் உருவாக திட்டமிடப்பட்டு இருந்தது. வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த படத்துக்காக சேகுவாரா கெட்டப்பில் நீண்ட தலைமுடி வளர்த்துக்கொண்டு சிலம்பரசன் இருந்து வந்தார். இந்த படம் ரூ. 150 கோடிக்கு மேல் பெரிய பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்குவதில் நீண்ட நாட்களாகவே தாமதம் நீடித்து வந்தது. 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தை டைரக்சன் செய்வதற்காக தேசிங்கு பெரியசாமியும் காத்துக்கொண்டே இருந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு தனது பிறந்த நாளில் இது தனது 50வது படமாக உருவாகும் என்றும் அறிவித்தார்.
அட்மின் சினி ஆர்ட்ஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவும் நடிகர் சிம்பு முடிவு செய்தார். இந்த படத்துக்கு எஸ்டிஆர் 50 எனவும் பெயரிடப்பட்டது. எஸ்டிஆர் 49 படத்தை முடித்துவிட்டு இந்த படத்தின் ஷூட்டிங்கை துவங்கவும் சிம்பு திட்டமிட்டிருந்தார்.
ஆனால் இந்த படத்தை துவங்குவதற்கான எந்த அறிகுறியும் சிம்புவுக்கு தெரியவில்லை. கடைசியாக சிம்பு நடித்த பத்து தல தக்லைஃப் போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்து விட்டன. அதனால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் அவரை வைத்து படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. பல நிறுவனங்களிடம் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து நடிகர் சிம்புவும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் இதுகுறித்து கலந்து பேசியிருக்கின்றனர். அப்போது நடிகர் சிம்பு, இதுவரை எஸ்டிஆர் 50 படத்துக்காக நாம் முயற்சித்தது போதும். இப்போதைக்கு இந்த படம் நாம் சேர்ந்து பண்ண வேண்டாம். நான் 2 வெற்றிப் படங்களை தந்துவிட்டு வருகிறேன். அதே போல் நீங்களும் ஒரு வெற்றிப் படத்தை இயக்கி விட்டு வாருங்கள்.
அதன்பிறகு இருவரும் சேர்ந்து இந்த படத்தை நாம் இணைந்து செய்வோம். அதுவரைக்கும் இந்த படத்தை அப்படியே தள்ளி வைப்போம். இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்றால் நான் வெற்றிப் படங்களை தந்தால் மட்டுமே அது முடியும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து இந்த தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக வேண்டிய எஸ்டிஆர் 50 படம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.





