சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா காமெடி சீரியலில் பட்டாபி கேரக்டரில் நடித்து தமிழக மக்களிடம் பிரபலமானவர் எம்எஸ் பாஸ்கர். பிறகு எங்கள் அண்ணா படத்தில் வடிவேலுவிடம் கலாட்டா செய்யும் குடிபோதை ஆசாமி கேரக்டரில் அவரது நடிப்பு நல்ல கவனம் பெற்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து நல்ல குணச்சித்திர நடிப்பை எம்எஸ் பாஸ்கர் வெளிப்படுத்தினார்.
இப்போது பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக மத்திய அரசின் சிறந்த துணை நடிகர் விருது பெற்ற ஒரு முன்னணி நடிகராக எம்எஸ் பாஸ்கர் இருந்து வருகிறார். மொழி எட்டு தோட்டாக்கள் டூரிஸ்ட் ஃபேமிலி என பல படங்களில் அவரது பக்குவப்பட்ட நடிப்பை தந்திருக்கிறார். பல படங்களில் எம்எஸ் பாஸ்கர் காமெடி நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் எம்எஸ் பாஸ்கர் கூறியதாவது, நான் ஒரு முறை கமலிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திரும்பிப் பார்த்து எச்சில் முழுங்குவதற்குள் ஒரு காதல் செத்துப் போச்சே அண்ணா என்றேன். அதற்கு கமல், எதைச் சொல்கிறாய்? என்று கேட்டார். அதற்கு நான், தேவர் மகன் படத்தில் நீங்கள் ரேவதியை பார்த்து என்ன கட்டிக்கிறியா? என்று கேட்பதற்கு முன்பு திரும்பி நின்று எச்சில் முழுங்குவீர்கள்.
அதில் என்னுடைய முந்தைய காதல் போச்சு, இனி ரேவதியை கல்யாணம் பண்ணித்தான் ஆகணும். வேறு வழி இல்லை என்பது போல தோன்றியது என்று சொன்னேன். ஏய் நீ இதெல்லாம் நோட் பண்ணுவியா? என்று கமல் என்னிடம் ஆச்சரியமாக கேட்டார். பார்ப்பேன் அண்ணா. அதையெல்லாம் பார்த்து கற்றுக் கொள்வேன் என்று சொன்னேன். இதே போல் ரஜினியிடம் ஒருமுறை பேசும்போது பாட்ஷா படம் பற்றி சொன்னேன்.
பாட்ஷாவில் முதல் சண்டை காட்சியில் தம்பியை தூக்கி விட ரஜினி குனிவார். அப்போது பின்னால் ஒருவர் கத்தியை எடுத்ததும் ரஜினி உச் கொட்டிவிட்டு திரும்புவார். இதை பற்றி ரஜினியிடம் பேசும்போது சொன்னேன். இது எல்லாம் வேண்டாம் என்றுதானே இங்கே வந்து ஆட்டோ ஓட்டி பிழைத்துக் கொண்டிருக்கிறேன்.
மறுபடியும் ஏண்டா என்னை சண்டைக்கு இழுக்குறீங்க? அப்படீங்கற ஒரு ரியாக்சன் அது என்றேன். அதைக் கேட்ட ரஜினிகாந்த், அப்படியா பாஸ்கர்? நான் சலிப்பாதான் ரியாக்சன் கொடுத்தேன் என்றார். நீங்க என்ன ரியாக்சன் அந்த இடத்தில் கொடுத்திருந்தாலும் இதுதான் கொடுக்க முடியும். அதுக்கு இதுதான் அர்த்தம் என்று சொன்னேன். அதைக் கேட்டதும் ரஜினிகாந்த் சந்தோஷமாக என் கன்னத்தை பிடித்து கிள்ளினார் என்று நடிகர் எம்எஸ் பாஸ்கர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





