சில தினங்களுக்கு முன்பு மும்பையில் வேவ்ஸ் உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாடு நடைபெற்றது. சினிமாவின் எதிர்காலம் வளர்ச்சி சார்ந்த அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்துப் பேசினார். இந்த மாநாட்டில் தென்னிந்திய சினிமா சார்ந்த நடிகர் நடிகைகள் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த் மோகன்லால் சிரஞ்சீவி நாகர்ஜூனா அக்ஷய் குமார் மிதுன் சக்ரவர்த்தி ஹேமாமாலினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். ஆனால் நடிகர் கமல்ஹாசன் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் ரூ. 1000 கோடி வசூலை எட்டியது இல்லை. ஆனால் தெலுங்கில் பாகுபலி 2 புஷ்பா 2 படங்கள் அந்த சாதனைகளை படைத்தன. அதே போல் கேஜிஎப் 2 கல்கி 2898 ஏடி ஆகிய படங்களும் அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டின. வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட பிரமாண்ட படைப்புகளாக அந்த படங்கள் பெரிய வெற்றிகளை குவித்தன.
அத்தகைய வெற்றிப் படங்கள் குறித்து வேவ்ஸ் மாநாட்டில் பங்கேற்ற நடிகர் நாகர்ஜூனா சில கருத்துகளை பதிவு செய்திருக்கிறார். அந்த மாநாட்டில் அவர் இதுகுறித்து பேசியதாவது, புஷ்பா 2 பாகுபலி 2 கேஜிஎப் 2 போன்ற படங்கள் தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே அதிக வசூலை வாரிக் குவித்திருக்கின்றன.
பெரிய திரையில் வெளிப்படும் மாயாஜாலத்தை அனுபவிப்பதற்காக புஷ்பா கேஜிஎப் பாகுபலி போன்ற படங்களை 100 பேரில் 90 பேர் ஆர்வமாக பார்க்கிறார்கள். புஷ்பராஜ் ராக்கி பாய் அமரேந்திர பாகுபலி போன்ற இயல்புக்கு மீறிய ஹீரோக்களை பார்க்க ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள் தனிப்பட்ட முறையில் நானும் அத்தகைய படங்களையும் ஹீரோக்களையும் பார்க்கவே மிகவும் விரும்புகிறேன்.
அனைத்து படங்களும் ஹீரோ கேரக்டர்களால் மட்டுமல்லாது வலுவான உள்ளடக்கத்தாலும் பெரிய வெற்றிகளை பெற்றுள்ளன. இயக்குனர் ராஜமவுலி கூட பாகுபலி படத்தை தெலுங்கில் தான் முதலில் உருவாக்கினார். ஆனால் அது சர்வதேச அளவில் அங்கீகாரத்தை அவருக்கு பெற்று கொடுத்தது என்று வேவ்ஸ் மாநாட்டில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா தனது உணர்வுகளை வெளிப்படையாக பேசியிருக்கிறார். ரஜினி நடித்துள்ள கூலி படத்தில் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





