நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் உலக நாயகன் என்று கொண்டாடப்பட்டவர். அரசியல்வாதியாக அவர் பல விமர்சனங்களை சந்தித்தாலும் ஒரு திரைப்பட கலைஞராக அவர் தொட்ட உச்சங்களை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதில் ஒன்றுதான் அவர் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் படம். அதில் இரண்டாம் குலோத்துங்க சோழனாக நடித்து பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் நெப்போலியன்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் நெப்போலியன் தசாவதாரம் படம் குறித்து கூறியதாவது, நடிகர் கமல்ஹாசன் ஒருமுறை என்னை நேரில் அழைத்தார். நெப்போலியன் நாம ஒரு படம் பண்ணனும் என்று சொன்னார். தசாவதாரம் படத்தில் என்னை நடிக்க சொன்னார். சார் சின்ன கேரக்டரா இருக்குதே சார் என்றேன். அந்த படத்தில் ஆரம்பத்தில் மட்டுமே நான் வருவேன்.
அதற்கு கமல் சார், சின்ன கேரக்டர்தான் நெப்போலியன். ஆனால் நல்ல பெயர் வரும். இந்த படத்தில் 10 கேரக்டர் நான்தான் பண்றேன். வேற யாருமே இந்த படத்தில் தெரிய மாட்டாங்க. எனக்கு அப்புறம் பெரிய கேரக்டர் என்றால் அது உங்களோட கேரக்டர்தான். அதனால் எனக்காக பண்ணி கொடுங்க. வேற யாரையும் அந்த கேரக்டர்ல என்னால யோசிக்க முடியலே.
அந்த இரண்டாம் குலோத்துங்க சோழன் என்றால் அந்த கம்பீரமான தோற்றத்துகு்கு நீங்க தான் கரெக்டா இருப்பீங்க. எனக்காக பண்ணுங்க என்றார். சரி சார் நான் பண்றேன் என்று ஒத்துக்கிட்டேன். அப்புறம் என்னுடைய வெயிட் கேட்டார். 98 கிலோ என்றேன். இன்னும் நீங்க 10 கிலோ வெயிட் ஏத்தணும். அந்த மாதிரி ஒரு பெரிய கம்பீரமான உடல் தோற்றத்தில் நடிக்கணும் என்றார்.
அதனால் பாடியை வெயிட் ஏத்துங்க. நல்லா எக்சர்சைஸ் பண்ணுங்க. இன்னும் 3 மாசத்துக்கு அப்புறம்தான் ஷூட்டிங் போகப் போறோம் என்றார். அதே மாதிரி 10 கிலோ வெயிட் ஏத்தி பெரிய உடம்போட அந்த படத்தில் நடிச்சேன். மிகப்பெரிய பெயரும் வரவேற்பும் எனக்கு கிடைத்தது.
அந்த ஒரு போர்ஷனுக்காக மட்டும் 18 கோடி ரூபாய் செலவு செஞ்சு எடுத்தாங்க. பெரிய அளவில் ஷெட் போட்டு அந்த காட்சிகளை படமா எடுத்தாங்க. காலத்தால் அழிக்க முடியாத ஒரு கதாபாத்திரம் எனக்கு என்று நெப்போலியன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இந்த படத்தில் ஆரம்பகட்ட காட்சிகள் இதுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த காட்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.





