தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என்ற பன்முக தன்மை கொண்டவர் பார்த்திபன். இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இப்போதும் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் மேடையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு நான் பெரிய அளவில் விருந்து சாப்பாடு எல்லாம் சாப்பிட்டது கிடையாது. ரசம் தேங்காய் சட்னி என்றுதான் என்னுடைய உணவு எளிமையாக இருக்கும்.
கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு ஒரு முறை பெரிய ஓட்டலில் விருந்துக்கு சென்றேன். முதன்முறையாக அப்போது தான் அங்கு அத்தனை வகையான விதவிதமான உணவுகளை நான் பார்க்கிறேன். அங்கே ஒரு தட்டு கொடுத்தார்கள். நான் அதில் அங்கிருந்த அயிட்டங்களை எல்லாம் என் தட்டில் ஆசையாக நிறைய எடுத்து வைத்துக்கொண்டேன்.
அங்கிருக்கும் உணவுகளை ஒன்றன் பின் ஒன்றாக சாப்பிட்ட பின்பு வாங்கிக் கொள்ளலாம். அது பஃபே சிஸ்டம் என்பது எனக்கு அப்போது தெரியாது. ஒருமுறை தான் தட்டில் எடுத்துக்கொள்ள அனுமதிப்பார்கள் என்று நானாக நினைத்துக்கொண்டு அங்கிருந்த அயிட்டங்களை எடுத்துக்கொண்டதால் என் தட்டு முழுக்க உணவு வகைகள் குவிந்து மலை போய் ஆகி விட்டது.
அதுவரை மற்றவர்களை நான் அங்கு கவனிக்கவில்லை. பிறகு பார்த்தால் அனைவரது தட்டிலும் ஏதோ ஒன்றிரண்டு அயிட்டங்கள் கொஞ்சமாக இருக்கின்றன. அதை சாப்பிட்டுவிட்டு பிறகு சென்று வாங்கிக் கொள்கிறார்கள். அப்போது அங்கு இருந்த சிலர் என் தட்டை பார்த்த போது எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது.
இந்த பசிக்காக நாம் எவ்வளவு கேவலமாக நடந்துக்கொண்டோம் என்று எனக்கு ரொம்பவும் அசிங்கமாகப் போய்விட்டது. அந்த மன வருத்தத்தில் அந்த தட்டை அப்படியே சாப்பிடாமல் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன் என்று அந்த விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன் உருக்கமாக கூறினார். இதைக் கேட்டு பார்வையாளர்கள் பலரும் கண் கலங்கி விட்டனர்.





