தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத்குமார். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் குட் பேட் அக்லி படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் இந்த ஆண்டில் வெளியாகி பெரிய வசூலை பெற்ற படமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் அஜீத்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி திரௌவுபதி முர்மு கையால் இந்த விருதை நடிகர் அஜீத்குமார் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் அஜீத்குமாரின் மனைவி ஷாலினி மற்றும் மகள், மகன் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.
தமிழ் சினிமாவில் நடிகர்கள் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் மத்திய அரசின் பத்ம விருதுகளை பெற்றிருக்கின்றனர். கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு இந்த விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இந்த விருதை பெற்றுக்கொண்டார். இந்த ஆண்டில் தமிழ் நடிகர்கள் வரிசையில் நடிகர் அஜீத்குமாரும் இந்த விருதை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜீத்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திரு அஜீத்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார்.
திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை அவர் பதித்துள்ளார். பார்முலா 2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும் கார்பந்தய வீரராகவும் திரு அஜீத் குமார் அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன் என்று அந்த அறிக்கையில் ஆந்திரா மாநில துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் அதில் கூறியிருக்கிறார்.
இன்னும் தமிழ் சினிமா நடிகர்கள் தரப்பில் யாரும் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜீத்குமாருக்கு இப்படி வாழ்த்து அறிக்கைகளை வெளியிடாத நிலையில் அவர்களை எல்லாம் முந்திக்கொண்டு ஆந்திரா துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் வாழ்த்துகளை தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.





