தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக உள்ள நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராகவும் மாறியிருக்கிறார். இப்போது அவர் கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையே அவரது புதிய கனவு மாளிகை குறித்து வெளியான தகவல்கள் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐதராபாத்தில் புறநகர் பகுதியில் அமைய உள்ள நடிகர் பிரபாஸின் இந்த புதிய பிரமாண்ட வீடு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது. இதன் கட்டுமான செலவு மட்டும் 160 கோடி ரூபாயை தாண்டும் என்று கூறப்படுகிறது. ஒரு அரண்மனை போன்ற அமைப்பில் இந்த வீடு உருவாக்கப்படுகிறது. இந்த மாளிகை முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
2 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த அரண்மனையில் தனியார் திரையரங்கம் மிகப்பெரிய நீச்சல் குளம் அழகிய பூங்கா மற்றும் தோட்டங்கள், அதிநவீன உடற்பயிற்சி கருவிகளுடன் ஜிம், யோகா மையம் உயர்தர பாதுகாப்பு வசதிகள் விருந்தினர்களுக்கான தனி குடியிருப்பு, கார்களுக்கு விசாலமான பார்க்கிங் வசதி உள்ளிட்ட பலவிதமான ஆடம்பர அம்சங்களுடன் இந்த மாளிகை கட்டப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஐதராபாத் அருகே ராயதுர்க்கத்தில் நடிகர் பிரபாஸூக்கு சொந்தமான ஆடம்பர விருந்தினர் இல்லம் உள்ளது. பல பிரபலங்களின் கொண்டாட்டங்கள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளுக்கான முக்கிய இடமாக அந்த இல்லம் இருந்து வருகிறது. ஆனால் அந்தப் பகுதி தற்போது அதிக அளவில் வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி பரபரப்பான நகரப் பகுதியாக மாறிவிட்டது.
அதனால் அமைதியான சூழலில் இந்த புதிய மாளிகையை புறநகர் பகுதியில் அமைக்க நடிகர் பிரபாஸ் முடிவு செய்துள்ளார். ஏனெனில் குடியிருப்புகள், மக்கள் போக்குவரத்து அதிகம் இல்லாத பகுதியாக இது உள்ளது. மேலும் இயற்கை சூழலை மையமாகக் கொண்டு இந்த வீட்டின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டு கட்டிடக்கலை நிபுணர்களும் இதில் பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் இன்னும் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்கின்றனர்.
வீட்டின் உட்புறங்களில் இண்டோர் டெக்கரேசன் எனப்படும் அலங்காரப் பணிகளுக்கும் பிரத்யேகமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் மரத்திலான அதிநுட்பமான கட்டுமான பணிகள் அலங்கார பணிகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார பொருட்களும் இதற்காக பயன்படுத்தப்பட உள்ளன. பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் நடிகர் பிரபாஸின் இந்த புதிய ஆடம்பர மாளிகை தென்னிந்திய நடிகர்களில் மிக அதிக செலவில் கட்டப்படும் தனியார் வீடுகளில் ஒன்றாக இருக்கும் என்கின்றனர்.





