நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீடு சென்னை தி நகர் போக் ரோட்டில் உள்ளது. அன்னை இல்லம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த வீட்டில் நடிகர் சிவாஜி கணேசன் பிஸியாக நடித்த காலகட்டத்தில் அவர் சொந்தமாக அவரது உழைப்பில் கட்டியது. இந்த வீட்டில் பாசமலர் உள்ளிட்ட பல படங்கள் ஷூட் செய்யப்பட்டு இருக்கின்றன.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்தே அவரது மூத்த மகன் ராம்குமார் குடும்பம், அவரது வாரிசுகள் அதே போல் இளைய மகன் நடிகர் பிரபு மற்றும் அவரது வாரிசுகள் இந்த வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவுக்கு பிறகு வாரிசுகளுக்கான சொத்துகள் பிரிக்கப்பட்டு அந்த வீடு இப்போது நடிகர் பிரபுவுக்கு சொந்தமானதாக உள்ளது. மற்ற யாருக்கும் அந்த வீட்டில் உரிமை கொண்டாட வாய்ப்பு இல்லை. நடிகர் பிரபு அவரது மனைவி புனிதா மற்றும் மகன் விக்ரம் பிரபு, மகள் இளவரசி என அவரது குடும்பத்துக்கு அந்த வீடு சொந்தம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் துஷ்யந்த், படம் தயாரித்த வகையில் தனலட்சுமி என்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திடம் 30 சதவீத வட்டிக்கு வாங்கிய கடன் ரூ. 9.39 கோடி ரூபாய் ஆன நிலையில் துஷ்யந்த் அந்த கடனை வட்டியுடன் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நடிகர் திலகம் வாழ்ந்து மறைந்த அன்னை இல்லத்தை ஜப்த செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இது தமிழ்நாடு முழுவதும் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் ரசிகர்களை பெரிய அதிர்ச்சியில் தள்ளியது. சினிமா துறை சார்ந்தவர்களும் இதற்காக கவலைப்பட்டனர்.
இந்நிலையில் ராம்குமார், அன்னை இல்லம் வீடு எங்களுக்கு சொந்தமில்லை. அது எனது தம்பி நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து, அந்த உத்தரவை ரத்து செய்ய கோரி இருந்தார். இப்போது நடிகர் பிரபுவும் சென்னை ஐகோர்ட்டில், அன்னை இ்லலம் வீடு எனக்கு மட்டுமே சொந்தமானது. சகோதரர் ராம்குமார் தொடர்புடைய நிதி சிக்கலில், தனக்கு உரிமையுள்ள வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்யுமாறு, அந்த மனுவில் கூறியிருக்கிறார்.





