இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எல்ஐகே படம் நாளை 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ப்ரி ரீலீஸ் ஈவண்ட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் விக்னேஷ் சிவன் நயன்தாரா மிஷ்கின் ராம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
அப்போது எல்ஐகே படத்தின் நாயகன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் மேடையில் பேசியதாவது, எஸ்ஜே சூர்யா பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நான் காலேஜ் முடித்த பிறகு அவரிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்திற்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். போங்க என்று சொன்னாங்க.
ஆனால் நான் போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது எஸ்.ஜே சூர்யா வெளியே வரும் போது பார்க்கலாம் என்று காத்திருந்தேன். அவர் உள்ளே இருந்து பார்த்து யார் அந்த பையன் என்று கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் உங்களிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று சொன்னேன்.
அவர் மீண்டும் ரெஸ்யூம் கொடுத்துட்டீங்களே? போங்கன்னு சொன்னார். ஆனால் அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன். என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டார். நிறைய உலக படங்கள் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது.
அந்த நாளிலிருந்து இன்று வரை நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரை தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தன. என் வாழ்க்கையை மாற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இன்று அவருடன் எல்ஐகே படத்தில் சேர்ந்து வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம்.
இயக்குனர் சீமானிடமும் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கு ஏற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது, அது ஒரு பெரிய குணம். அவர் நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக் கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேச வேண்டுமோ அதை மட்டுமே பேசுவார். அந்த குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நானும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று பிரதீப் ரங்கநாதன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





