தமிழ் சினிமாவில் சில படங்களில் நாயகனாகவும் சில படங்களில் வில்லனாகவும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். குறிப்பாக கில்லி போக்கிரி சிவகாசி போன்ற படங்களில் அவரது வில்லன் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அதே போல் மொழி அபியும் நானும் உன் சமையலறையில் 60 வயது மாநிறம் காஞ்சிபுரம் போன்ற படங்களில் பிரகாஷ் ராஜின் பக்குவப்பட்ட நடிப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிக கவனம் பெற்றது. நடிகராக மட்டுமின்றி அரசியல் நாட்டம் கொண்டவராகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் இருந்து வருகிறார். மத்திய அரசு குறித்தும் அடிக்கடி கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறார்.
கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 22ம் தேதி முதல் இலக்கியத் திருவிழா நடந்து வந்தது. நேற்று இந்த இலக்கிய திருவிழா நிறைவடைந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் இந்தி சினிமா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியதாவது, பாலிவுட் சினிமா அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. இந்தி சினிமாக்கள் இப்போது மெழுகு அருங்காட்சியத்தில் உள்ள பிளாஸ்டிக் சிலைகளைப் போல இருக்கின்றன. அந்த உருவங்கள் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அவற்றில் உயிர் இல்லை.
தென்னிந்திய சினிமாக்களை பொறுத்த வரை குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள படங்களை பார்த்தால் அவை இன்னும் மண்ணின் வாசனை மாறாமல் இருக்கின்றன. சாமானிய மக்களின் வாழ்க்கையையும் சமூகப் பிரச்சனைகளையும் தமிழ் மற்றும் மலையாள படங்கள் தைரியமாக பேசுகின்றன. ஜெய் பீம் மாமன்னன் போன்ற படங்கள் சமூக மாற்றத்திற்கான குரல் கொடுக்கின்றன. ஆனால் பாலிவுட் இன்னும் வணிக வலையில் சிக்கி கிடக்கிறது.
இன்றைய இந்தி படங்கள் வெறும் ஆடம்பர செட்டுகள் பெரிய பட்ஜெட்டுகள் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றன. அவற்றில் கதைக்கோ அல்லது உணர்வுகளுக்கோ இடமே இல்லை. நமது கதைகள் நமது வேர்களைப் பற்றி பேச வேண்டும் அதை விட்டுவிட்டு வெறும் கிளாசிக் மற்றும் மேலோட்டமான கவர்ச்சியை மட்டும் நம்பினால் மக்கள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் அந்த விழாவில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.





