கடந்த ஆண்டில் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்த அவர் பிறகு கட்சிக்கொடி கொள்கை பாடல் என அறிமுகம் செய்தார். பிறகு கடந்தாண்டில் அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்திக் காட்டினார்.
பல லட்சம் பேர் திரண்ட அந்த மாநாட்டில் நடிகர் விஜய், அரசியல் கட்சி தலைவராக 48 நிமிடங்கள் ஆவேசமாக பேசினார். அவரது பேச்சை கேட்டு தமிழக மக்கள் மட்டுமின்றி தமிழக அரசியல் கட்சிகளும் அரண்டு போய்விட்டன. எனக்கு கொள்கை எதிரி பாஜக அரசியல் எதிரி திமுக என்றும் நடிகர் விஜய் அந்த மாநாட்டில் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து இப்போது தவெக கட்சியின் 2வது மாநில மாநாடு மதுரையில் நாளை 21ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு பல லட்சம் மக்கள் மாநாட்டுக்கு வர உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை தவெக கட்சியினர் கடந்த ஒரு மாதமாக செய்து வருகின்றனர். 1.5 லட்சம் பேர் அமர்ந்து மாநாட்டை பார்க்கும் விதமாக பிளாஸ்டிக் சேர்கள் போட உள்ளனர். அதே போல் குடிநீர் கழிப்பிடம் மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 5 ஒப்பந்ததாரர்களிடம் மாநாட்டில் மக்கள் அமர்வதற்காக 1.5 லட்சம் பிளாஸ்டிக் சேர்கள் ஒரு நாள் வாடகைக்கு பேசப்பட்டுள்ளன. இப்போது மாநாடு நெருங்கும் நிலையில், அந்த ஒப்பந்ததாரர்கள் சேர்கள் தர முடியாது என கைவிரித்து விட்டனர். இதற்கு ஆளுங்கட்சி தந்த நெருக்கடி அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து முதல் கட்டமாக 50 ஆயிரம் பிளாஸ்டிக் சேர்கள் வரவழைக்கப்பட்டு மாநாட்டு பார்வையாளர் பகுதியில் போடப்பட்டு வருகின்றன. மேலும் மாநாட்டுக்கு வருகிற வழியில் பிரதான ரோட்டில் பாலம் கட்டுவதாக கூறி பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கனரக வாகனங்கள் அந்த வழியாக வருவதை தடுத்ததாகவும் ஒரு புகார் எழுந்துள்ளது.
அத்துடன் டூவீலர்களில் யாரும் மாநாட்டுக்கு வரக்கூடாது என்றும் போலீஸ் தடை விதித்துள்ளது. திருப்பூர் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மதுரைக்கு செல்லும் பஸ்களின் எண்ணிக்கை கணிமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. மாநாட்டுக்கு ஏராளமான மக்கள் வருவதை தடுக்க ஆளுங்கட்சி திமுக செய்யும் சூழ்ச்சிகள்தான் இது என்று தவெக கட்சியினர் புகார் கூறி வருகின்றனர்.





